< Back
மாநில செய்திகள்
பஸ் மோதி உயிருக்கு போராடிய வாலிபரை சாலையோரம் வீசிச்சென்ற டிரைவர், கிளீனர்... மடிந்து போன மனிதநேயம்
மாநில செய்திகள்

பஸ் மோதி உயிருக்கு போராடிய வாலிபரை சாலையோரம் வீசிச்சென்ற டிரைவர், கிளீனர்... மடிந்து போன மனிதநேயம்

தினத்தந்தி
|
17 May 2024 10:53 PM GMT

பஸ் மோதி படுகாயம் அடைந்த வாலிபரை சாலையோரம் வீசிச்சென்ற டிரைவர், கிளீனரை கண்காணிப்பு கேமரா காட்டி கொடுத்தது.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் நிலைய நுழைவு வாயில் அருகே அதிகாலை 4.30 மணிக்கு நின்றிருந்த வாலிபர் மீது அந்த வழியாக வந்த சுற்றுலா பஸ் மோதிவிட்டு சென்றது. இதில் படுகாயம் அடைந்த வாலிபரை அக்கம்,பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையறிந்து விரைந்து வந்த மேட்டுப்பாளையம் போலீசார் அந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தினர். அதோடு விபத்தை ஏற்படுத்திய சுற்றுலா பஸ்சை கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்த சுற்றுலா பஸ் மேட்டுப்பாளையம் பஸ் நிலைய பகுதியில் நின்றிருந்த வாலிபர் மீது மோதியதும், அதில் படுகாயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்காமல் டிரைவர் சிவராஜ் மற்றும் கிளீனர் சரவணன் ஆகியோர், அந்த வாலிபரை தூக்கி சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுற்றுலா பஸ் டிரைவர் சிவராஜ் மற்றும் கிளீனர் சரவணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் பஸ்சும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விபத்தில் சிக்கியவரை கண்டும் காணாமல் போவோர் என்பது ஒருரகம். ஆனால் விபத்தில் சிக்கி குற்றுயிராய் கிடந்த ஒருவரை கண்டதும், இடையூறாக எண்ணி இதயத்தை தூக்கி எறிந்தவர்களாய், அவரை சாலையோரத்தில் தூக்கி வீசி விட்டு சென்றவர்களை பார்க்கும் போது, மடிந்து போனதோ....மனித நேயம் என்று எண்ணத்தோன்றுகிறதல்லவா.

மேலும் செய்திகள்