தூத்துக்குடியில் சிறுமிக்கு தாலி கட்டி குடும்பம் நடத்திய டிரைவர்: மகிளா கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
|தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் மினி பஸ்டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி சக்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 24). இவர் மினிபஸ் டிரைவராகவும், கூலித் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தாராம். இவருக்கு பிளஸ்-2 படித்து வந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த 14.10.21 அன்று சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று மஞ்சள் கயிறை கழுத்தில் கட்டினாராம். பின்னர் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார், மணிகண்டன் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் அப்போதைய அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மாதவராமானுஜம் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல்கள் வி.எல்லம்மாள், ஸ்ரீதேவி ஆகியோர் ஆஜரானார்கள்.