கள்ளக்குறிச்சி
பெண்ணை தாக்கிய டிரைவர் கைது
|கள்ளக்குறிச்சி அருகே பெண்ணை தாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே சோலன்கரை கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி பிரேமாவதி (வயது 38). இவர் சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் கள்ளக்குறிச்சி அருகே நாகலூர் கிராமத்தை சேர்ந்த ராமநாதன் மகன் நடராஜ்குமார் (38) என்பவர் அங்கு டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். சிங்கப்பூரில் இருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது நடராஜ்குமார் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றியும், மிரட்டியும் பிரேமாவதியிடம் இருந்து 4 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரத்தை பறித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நகை-பணத்தை திருப்பி கேட்டபோது, இந்தியாவிற்கு சென்றதும் திருப்பி தருவதாக நடராஜ்குமார் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர். சம்பவத்தன்று பிரேமாவதி நாகலூர் கிராமத்திற்கு சென்று அங்கிருந்த நடராஜ்குமாரிடம் பணம் மற்றும் நகையை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு நடராஜ்குமார் மறுப்பு தெரிவித்ததோடு தனது மனைவி கவிதாவுடன் சேர்ந்து பிரேமாவதியை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜ்குமாரை கைது செய்தனர்.