தஞ்சாவூர்
டிரைவரை அரிவாளால் தாக்கி பணம்- செல்போன் பறிப்பு
|கும்பகோணத்தில் உழவு எந்திர டிரைவரை அரிவாளால் தாக்கி பணம்- செல்போனை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்:
டிரைவர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 41). இவர் விவசாய உழவு எந்திரம் ஓட்டும் டிரைவராக உள்ளார். இவர் நாகை பகுதியில் தங்கி வேலை பார்த்துவிட்டு தனது சொந்த ஊரான சின்னசேலம் செல்வதற்காக பஸ்சில் வந்துள்ளார்.
பஸ் கும்பகோணம் பஸ் நிலையத்திற்கு வந்தபோது பஸ்சில் வந்த குமார் இயற்கை உபாதை கழிப்பதற்காக பஸ்சைவிட்டு கீழே இறங்கி ஜான் செல்வராஜ் நகர் அருகே உள்ள சந்து பகுதிக்கு சென்றுள்ளார்.
பணம்- செல்போன் பறிப்பு
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் 4 பேர் குமாரை கத்தியால் தாக்கி அவர் வைத்திருந்த ரூ.1,000 மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த குமார் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள புறக்காவல் நிலைய போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார், மர்மநபர்கள் தாக்கியதில் காயமடைந்த குமாரை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரகசிய தகவல்
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.இந்த நிலையில் குமாரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் திருநாகேஸ்வரம் பைபாஸ் சாலை பகுதியில் மீண்டும் வழிப்பறி செய்வதற்காக மறைந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த 4 பேரையும் சுற்றி வளைத்தனர். அப்போது 2 பேரை விரட்டி பிடித்தனர். இதில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
2 வாலிபர்கள் கைது
பிடிபட்ட 2 பேரை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பாணாதுறை பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 24), மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த சாதிக்பாட்ஷா (25) என்பதும், இவர்கள் புதிய பஸ் நிலையத்தில் குமாரை தாக்கி வழிப்பறி செய்து கொண்டு மீண்டும் வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டு காத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.