விழுப்புரம்
பஸ்சை நடுரோட்டிலேயே நிறுத்திய டிரைவர்
|படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டதால் பஸ்சை நடுரோட்டிலேயே டிரைவர் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தாதம்பாளையம் கிராமத்திற்கு நேற்று மாலை அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. மாலை நேரம் என்பதால் பள்ளி முடிந்து மாணவ- மாணவிகள் அதிகளவில் அந்த பஸ்சில் பயணம் செய்தனர். இவர்களில் மாணவர்கள் சிலர், பஸ்சின் இருபுற படிக்கட்டுகளிலும் தொங்கியவாறு பயணம் செய்தனர். பஸ்சிற்குள் நின்றுகொண்டு பயணம் செய்ய போதிய இடமிருந்தபோதிலும் அந்த மாணவர்கள் வேண்டுமென்றே பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.
உடனே அந்த மாணவர்களிடம் பஸ்சிற்குள் உள்ளே வருமாறு கண்டக்டர் கூறிவந்துள்ளார். இருப்பினும் அதை பொருட்படுத்தாத மாணவர்கள், படிக்கட்டுகளில் தொங்கியபடியே பயணம் செய்து வந்தனர். டிரைவரும், கண்டக்டரும் அந்த மாணவர்களிடம் தொடர்ந்து எச்சரித்தும் மாணவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து விபத்து ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையம் அருகே பஸ்சை சாலையில் நிறுத்திவிட்டு டிரைவரும், கண்டக்டரும் பஸ்சிலிருந்து கீழே இறங்கி போலீஸ் நிலையத்திற்கு சென்று மாணவர்களின் ஆபத்தான பயணம் குறித்து புகார் செய்தனர். அதோடு பஸ்சிற்குள் இடமிருக்கிறபோதிலும் மாணவர்கள் படிக்கட்டிலேயே பயணம் செய்வதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு நாங்களே முழு பொறுப்பேற்க வேண்டும் என்பதால் பஸ்சை இயக்க மாட்டோம் என்று அவர்கள் கூறினர்.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பஸ்சில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன், தாதம்பாளையம் வரை பயணம் செய்து மாணவர்கள் ஒழுக்கமாக பயணம் செய்கிறார்களா? என்பதை கண்காணித்தார். பின்னர் அவர் தாதம்பாளையத்திலிருந்து அதே பஸ்சில் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையம் வந்திறங்கினார். இந்த சம்பவத்தினால் விழுப்புரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.