விழுப்புரம்
மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய டிரைவர்
|திருவெண்ணெய்நல்லூர் அருகே கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறிய மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை டிரைவர் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தடுத்தாட்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. பொக்லைன் எந்திர டிரைவர். இவரது மனைவி பெரியநாயகி (வயது 26). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆரோக்கியசாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை பெரியநாயகி வீட்டில் உள்ள அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆரோக்கியசாமியிடம் வேறு ஒரு பெண்ணுடன் வைத்துள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு பொியநாயகி கூறியதாக தெரிகிறது.
கொதிக்கும் சாம்பாரை...
இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆரோக்கியசாமி, பாத்திரத்தில் கொதித்து கொண்டிருந்த சாம்பாரை எடுத்து பெரியநாயகி உடம்பில் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் வலியால் அலறி துடித்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பெரியநாயகிக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறிய மனைவி மீது கணவன் கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.