காஞ்சிபுரம்
குன்றத்தூர் அருகே அக்காள் கணவரை அடித்துக்கொன்ற டிரைவர்
|குன்றத்தூர் அருகே அக்காள் கணவரை அடித்துக்கொன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், சாந்தி நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). கட்டுமானத்தொழிலாளி. இவரது மனைவி தேவி (38). 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடேசன் மீது செல்போன் பறிப்பு மற்றும் ஒரு கொலை வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக வெங்கடேசன் மனைவியை பிரிந்து வாழ்ந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது மனைவியின் வீட்டுக்கு வந்த வெங்கடேசன் குடிபோதையில் மனைவியை அடித்து, உதைத்து பணம் கேட்டு தொந்தரவு செய்தார். நேற்று முன்தினம் மீண்டும் மனைவியிடம் வெங்கடேசன் தகராறில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவரான தேவியின் தம்பி சதீஷ்குமார் (40) இது குறித்து தட்டி கேட்டபோது வெங்கடேசனுக்கும், சதீஷ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் வெங்கடேசன் கட்டையை எடுத்து வந்து சதீஷ்குமாரை அடிக்க வரும்போது அதனை தடுத்து திருப்பி வெங்கடேசன் தாக்கியதில் வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து இறந்து போனார். இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.