செல்போனில் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டிய டிரைவர்.. அலறிய பயணிகள்
|சம்பந்தப்பட்ட தனியார் பஸ் டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
கடலூர்,
கடலூரில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சின் டிரைவர் தனது செல்போனில் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டினார். அவர், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை-குஜராத் அணிகள் மோதிய போட்டியை செல்போனில் பார்த்துக்கொண்டே அலட்சியமாக ஓட்டியுள்ளார்.
இதனால் அந்த தனியார் பஸ், முன்னால் சென்ற கார் மற்றும் அரசு பஸ் மீது 2 முறை மோதுவதுபோல் சென்றுள்ளது. இதை பஸ் டிரைவரின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த பயணிகள் பார்த்து கூச்சலிட்டனர். உடனே டிரைவர் பிரேக் போட்டதால் பஸ், விபத்தில் இருந்து தப்பியது.
அதே சமயத்தில் பஸ்சில் இருந்த பயணிகள், தங்களது இருக்கைகளில் இருந்து கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகளில் சிலர் டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர். இருப்பினும் அதை ஒரு பொருட்டாக கருதாத டிரைவர், தொடர்ந்து தனது செல்போனில் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டியுள்ளார். இதனால் பயணிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
இதையடுத்து விருத்தாசலம் பஸ் நிலையத்துக்கு வந்ததும் சம்பந்தப்பட்ட தனியார் பஸ் டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் புகார்கள் சென்றன. இது குறித்து விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் கூறுகையில், கிரிக்கெட் பார்த்தபடி தனியார் பஸ்சை டிரைவர் ஓட்டியது தொடர்பாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.