திண்டுக்கல்
தட்டிக்கேட்டவரிடம் மோதலில் ஈடுபட்ட டிரைவர், கண்டக்டர்
|விதியை மீறி பாலத்தில் வந்த அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி தட்டிக்கேட்டவரிடம் டிரைவர், கண்டக்டர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் அரசு, தனியார் பஸ்கள் நாகல்நகர் மேம்பாலம் வழியாகவே செல்கின்றன. அதேபோல் நத்தத்தில் இருந்து திண்டுக்கல் வரும் பஸ்களும் இதே பாலத்தில் வந்து நாகல்நகர் ரவுண்டானாவை கடந்து மெங்கில்ஸ் ரோடு வழியாக பஸ் நிலையம் செல்கின்றன.
இதனால் அந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும். எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க சாலையின் நடுவே இரும்பு, சிமெண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் நத்தத்தில் இருந்து திண்டுக்கல் வரும் வாகனங்கள் மேம்பாலத்தை கடந்ததும் ரவுண்டானாவை சுற்றி வராமல் மெங்கில்ஸ் சாலைக்கு செல்லாமல் தடுக்க பாலத்தில் சிறிது தூரம் வரை இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
இதனையும் மீறி சிலர் தங்கள் வாகனங்களில் பாலத்தில் இருந்து இறங்கியதும் மெங்கில்ஸ் ரோட்டுக்கு செல்கின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாலிபருடன் மோதல்
இந்த நிலையில் நேற்று காலை நத்தம் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் இருந்து திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு வந்த அரசு பஸ் விதிமுறையை மீறி மெங்கில்ஸ் சாலைக்கு செல்வதற்காக மேம்பாலத்தில் இடதுபுறமாக செல்வதற்கு பதிலாக வலதுபுறமாக வந்தது.
அப்போது மெங்கில்ஸ் ரோட்டில் இருந்து மேம்பாலத்தில் ஏறுவதற்காக, மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். இதனால் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதுவது போன்ற சூழல் ஏற்பட்டது. இதில் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் பஸ்சை நிறுத்தினார். இதுதொடர்பாக டிரைவரிடம் தட்டிக்கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர், பஸ்சை பாலத்தின் அடிவாரத்தில் நடுரோட்டில் நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். பின்னர் டிரைவரும், கண்டக்டரும் சேர்ந்து அந்த வாலிபருடன் மோதலில் ஈடுபட்டனர்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வாலிபருக்கு ஆதரவாக பேசியதுடன், டிரைவர்-கண்டக்டரையும் கண்டித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர்-கண்டக்டர் நைசாக நழுவினர்.
பின்னர் அந்த பஸ், அங்கிருந்து புறப்பட்டு பஸ் நிலையம் நோக்கி சென்றது. விதிமுறையை மீறி பஸ்சை இயக்கும் இதுபோன்ற நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
----