< Back
மாநில செய்திகள்
ஆன்மிகத்தில் உள்ளவர்களை நேசிப்பது தான் திராவிட மாடல் ஆட்சி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

ஆன்மிகத்தில் உள்ளவர்களை நேசிப்பது தான் திராவிட மாடல் ஆட்சி

தினத்தந்தி
|
8 Oct 2023 10:56 PM IST

ஆன்மிகத்தில் உள்ளவர்களை நேசிப்பது தான் திராவிட மாடல் ஆட்சி. ஏற்றத்தாழ்வு பார்க்கும் சனாதனத்தை ஏற்க முடியாது என்று ப.உ.சண்முகம், தர்மலிங்கம் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

ஆன்மிகத்தில் உள்ளவர்களை நேசிப்பது தான் திராவிட மாடல் ஆட்சி. ஏற்றத்தாழ்வு பார்க்கும் சனாதனத்தை ஏற்க முடியாது என்று ப.உ.சண்முகம், தர்மலிங்கம் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

நூற்றாண்டு விழா

தி.மு.க. முன்னாள் அமைச்சர் ப.உ.சண்முகம், தி.மு.க. முதல் எம்.பி. இரா.தர்மலிங்கம் ஆகியோரின் நூற்றாண்டு விழா திருவண்ணாமலை மாதவி பன்னீர்செல்வம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன் வரவேற்றார்

விழாவில் ப.உ.சண்முகம், இரா.தர்மலிங்கம் ஆகியோரின் உருவப்படத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு அஞ்சலி செலுத்தி 400 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது ப.உ.சண்முகம், இரா.தர்மலிங்கம் ஆகியோரின் வயது குறித்து என்னிடம் கேட்டறிந்தார். இருவரும் கருணாநிதியோடு சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்று நான் தெரிவித்தேன்.

அதற்கு அவர் இரு தலைவர்களுக்கும் மாவட்ட கழகம் சார்பில் நூற்றாண்டு விழாவை நடத்த சொன்னார். எனவே இந்த மாவட்டத்தின் சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாவட்டத்தின் இயக்கத்திற்கு ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ப.உ.சண்முகமும், ஒரு தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இரா.தர்மலிங்கமும் இலக்கணமாகும்.

இந்தி எதிர்ப்புக்கு வித்திட்ட மண்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது இந்தியை எதிர்த்து மாநாடு நடத்த வித்திட்ட மண் திருவண்ணாமலை. இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்த யாரும் முன்வராத நிலையில் தனது அரிசி ஆலையில் அந்த மாநாட்டை நடத்தியவர் ப.உ.சண்முகம்.

தி.மு.க. பதவிக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. இது ஒரு அமைப்பு. மக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்து முடிப்பதற்கு ஆட்சி அதிகாரம் தேவைப்பட்டதால் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. அதனால்தான் இந்த இயக்கத்திற்கு கொள்கைகள் இருந்து கொண்டே இருக்கிறது.

ஏற்றத்தாழ்வுகள்

அந்த கொள்கையில் இருந்து மாறுபட முடியாது என்பதால் தான் இளைஞர்களை வழிநடத்தி செல்கிற உதயநிதி ஸ்டாலின் சனாதானம் அழிக்கப்பட வேண்டும் என்றார். இது திராவிட இயக்கத்தின் கொள்கை. இதில் சமரசம் செய்து கொள்ள முடியாது. ஏற்றத்தாழ்வு பார்ப்பது சனாதனம்.

ஆன்மிகம் வேறு, சனாதனம் வேறு என்பது தெரியாமல் சிலர் உளறிக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மிகத்தையும் சனாதனத்தையும் சிலர் பின்னி பிணைக்கிறார்கள்.

இந்து என்பது வேறு, இந்துத்துவா என்பது வேறு. நாம் இந்துக்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இந்துத்துவா என்பது பிறரை அழிப்பது, ஏற்றத்தாழ்வு பார்ப்பது. சனாதனமும் அப்படித்தான். தாழ்ந்தவன், தீண்டதகாதவன் என்று ஆண்டவன் பார்ப்பது தான் சனாதனம்.

ஆன்மிகத்திற்கும் சனாதனத்திற்கும் எந்த சம்பந்தமுமே இல்லை. ஆன்மிகத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.

காரணம் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அரசின் சார்பில் பல கோடி ரூபாய் திட்டங்களை கொண்டு வருகிறோம். ஆகவே ஆன்மிகத்தை திராவிட மாடல் ஆட்சி மறுக்கிறதா என்றால் இல்லை. குழம்பிக் கொள்ள வேண்டாம்.

ஆன்மிகத்தில் இருப்பவர்கள் நேசிப்பது

சனாதனம் ஏற்றத்தாழ்வை பார்ப்பது. ஆன்மிகம் அப்படியல்ல, அனைவரையும் நேசிப்பது தான் ஆன்மிகம். ஆன்மிகத்தில் இருப்பவர்களை நேசிப்பது தான் திராவிடர் மாடல் ஆட்சி. அதனால்தான் பேரறிஞர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார்.

பெரியாரின் கொள்கையை வளர்ப்பவர்களாக ப.உ.சண்முகம், தர்மலிங்கம். ஆகியோர் இருந்தனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் எம்.பி. வேணுகோபால், டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ. வி.தனுசு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

ப.உ.சண்முகம் குடும்பத்தைச் சேர்ந்த கண்ணன், ரமணி, தர்மலிங்கம் குடும்பத்தை சேர்ந்த கல்பனா, சம்பத் உள்ளிட்டவர்கள் ஏற்புரையாற்றினர்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன் அம்பேத்குமார், ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்முத்து, விழா குழுவினர் எஸ்.பன்னீர்செல்வம், பிரியா விஜயரங்கன், எம்.இ.ஜமாலுதீன், இந்திரராஜன் அனைத்து வர்த்தக சங்க தலைவர் எஸ்.ரவிச்சந்திரன், அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், மாவட்ட அமைப்பாளர்கள் டி.வி.எம்.நேரு, ஜெ.மெய்கண்டன், பிரவீன் ஸ்ரீதரன், சி.ராம்காந்த், வக்கீல்கள் டி.எம்.கதிரவன், வெற்றி டிஜிட்டல் கார்த்திகேயன், துரை வெங்கட் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன் நன்றி கூறினார்.

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மங்கள இசை, கவியரங்கம், கருத்தரங்கு ஆகியவை நடைபெற்றது.

மேலும் செய்திகள்