< Back
மாநில செய்திகள்
மழை வெள்ளத்திற்கு 1 ரூபாய் கூட தராதவர்களை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மாநில செய்திகள்

மழை வெள்ளத்திற்கு 1 ரூபாய் கூட தராதவர்களை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தினத்தந்தி
|
4 March 2024 11:53 AM IST

மக்களின் மனசாட்சியாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் ரூ.114.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதன்பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தார்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

டெல்டா மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், மயிலாடுதுறை காவிரியால் செழிப்போடு இருக்கும் மாவட்டம்.

கருணாநிதியால் அமைக்கப்பட்ட பூம்புகார் இடம்பெற்றுள்ள மாவட்டம் மயிலாடுதுறை. தில்லையாடி வள்ளியம்மை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பிறந்த மண் மயிலாடுதுறை. புதிய மாவட்டத்தை அறிவிப்பதை விட, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே முக்கியம். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ரூ.655 கோடியில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

மயிலாடுதுறைக்கு ரூ.10 கோடியில் புதிய நகராட்சி கட்டிடம் கட்டப்படும். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உப்புநீர் புகுவதை தடுக்க ரூ.44 கோடியில் நீர் ஒழுங்குகள் அமைக்கப்படும். ரூ.2.40 கோடி செலவில் புதிய படுகயணை கட்டப்படும். மயிலாடுதுறையில் ரூ.30 கோடி செலவில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 3 மாவட்ட கல்லூரிகளுக்கு 1,642 கணினிகள் வழங்கப்படும். மயிலாடுதுறையில் ரூ.5 கோடியில் புதிய நூலகம் அமைக்கப்படும். நாகை மாவட்டம் சிறுதூர் வெள்ளையாறு முகத்துவாரத்தில் கரை பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்கப்படும்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. அறிவிப்புகளை அரசாணைகளாக மாற்றுவதோடு, அதை அமல்படுத்துவதை கண்காணிக்கும் அரசு. தமிழக வரலாற்றிலேயே கிராமப்புற பட்டாக்களை கணினி மூலம் வழங்குவது இதுவே முதல்முறை. 1.15 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 2 லட்சம் மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றுள்ளனர். மக்களின் மனசாட்சியாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

வருகிற 6-ம் தேதி 'நீங்கள் நலமா' என்ற புதிய திட்டம் சென்னையில் தொடங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் பொதுமக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்து கேட்கப்படும். முதல்-அமைச்சர், அமைச்சர், துறை சார்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் மக்களை தொடர்பு கொண்டு கோரிக்கைகளை கேட்பார்கள். மக்களின் குறைகளை கேட்டு நிதி நெருக்கடியிலும், திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். புதிய மாவட்டங்களை அறிவிப்பது பெரியது அல்ல. அந்த மாவட்டங்களுகு தேவையான உட்கட்டமைப்புகளை அமைத்து தருவதுதான் பெரியது. பல்வேறு புதிய மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் தி.மு.க. ஆட்சியில்தான் செய்யப்பட்டன.

தேர்தல் வருவதால் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழ்நாடு வர துவங்கியுள்ளார். தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவர்கள் அல்ல நாங்கள். தமிழ்நாட்டுக்கு நன்மையான திட்டங்களையும், தமிழ்நாட்டின் கோரிக்கைகளையும் நிறைவேற்றிவிட்டு வரட்டும். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம், ஓட்டு ஆகியவை மட்டும் போதும் என்ற நினைப்பில் இருக்கிறார்கள்.

அடுத்தடுத்து 2 இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு தேவையான நிவாரண நிதியை மத்திய அரசு இன்னும் தரவில்லை. தமிழக மழை வெள்ளத்திற்கு 1 ரூபாய் கூட தராதவர்களை பார்த்து தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சிக்காகவும் நிற்கும் தி.மு.க. அரசிற்கு என்றும் மக்கள் துணை நிற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்