எடப்பாடி பழனிசாமியால் இரட்டை இலை சின்னம் செல்வாக்கை இழந்து விட்டது - டி.டி.வி.தினகரன்
|எடப்பாடி பழனிசாமியால் இரட்டை இலை சின்னம் செல்வாக்கை இழந்து விட்டது என டி.டி.வி.தினகரன் கூறினார்.
தஞ்சை வந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இரட்டை இலை சின்னத்துக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் கையெழுத்து போட முடியாது என்றும், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் மட்டுமே கையெழுத்திட முடியும் என சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது. இது, இத்தேர்தலுக்கான இடைக்காலத் தீர்ப்புதான்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் இருந்த வரை இரட்டை இலை சின்னம் செல்வாக்கு பெற்றிருந்தது. ஆட்சி அதிகாரம் 4 ஆண்டுகள் இருந்த காரணத்தால் அந்த சின்னத்தை வைத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஜேப்படி வித்தைகள் செய்தனர். கடந்த ஜூலை 11-ந் தேதி நடந்த பொதுக்குழு போரக்்களத்துக்கு பிறகு இவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். அதனால் எடப்பாடி பழனிசாமியால் இரட்டை இலை சின்னம் செல்வாக்கை இழந்து விட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவர்களால் இரட்டை இலை சின்னத்தை வைத்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் அதிகம் வாங்கலாமே தவிர, வெற்றி பெற முடியாது என்பதே உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.