< Back
மாநில செய்திகள்
வீட்டின் கதவை உடைத்து 75 பவுன் நகைகள் கொள்ளை
திருவாரூர்
மாநில செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து 75 பவுன் நகைகள் கொள்ளை

தினத்தந்தி
|
1 Oct 2023 12:15 AM IST

மன்னார்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 75 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மன்னார்குடி:

வெளிநாட்டில் வேலை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டை

மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அருணாச்சலம்(வயது46). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மன்னார்குடி அருகே சோனாப்பேட்டை கிராமத்தில் உள்ள தனது தாயை பார்க்க அருணாச்சலம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

நேற்று முன்தினம் இரவு அருணாச்சலம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 75 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

விசாரணை

இது குறித்து அருணாச்சலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத்ஆண்டோ, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். திருவாரூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

பரபரப்பு

இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 75 பவுன் நகைகளை திருடி சென்ற சம்பவம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்