திமுக அரசின் நடவடிக்கை 'சொல்வது ஒன்று செய்வது ஒன்று' போல் உள்ளது' - ஓ.பன்னீர்செல்வம்
|திமுக அரசின் நடவடிக்கை 'சொல்வது ஒன்று செய்வது ஒன்று' போல் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று அயல் நாட்டு மொழிகள் உட்பட பல மொழிகளை கற்றறிந்த மகாகவி பாரதியார் கூறுகிறார் என்றால், அந்த அளவுக்கு தமிழ் மொழியிலே இனிமையும், இசையும், ஓசையும், சொல்லாற்றலும் இருக்கிறது என்பதுதான் பொருள். இப்படிப்பட்ட தமிழ் மொழியை உயர் நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், தமிழ் மொழியை இந்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதிலும், பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி நடைபெறுகிறது என்று கூறிக் கொள்வதிலும் முனைப்புக் காட்டும் முதலமைச்சர், தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கும் முதலமைச்சர், தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் சட்ட விதிகளை தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கின்றாரா என்றால் இல்லை.
மத்திய அரசு தற்போது நடைமுறையில் உள்ள 29 தொழிலாளர் சட்டங்களை உள்ளடக்கி நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உருவாக்கி உள்ளதன் அடிப்படையில், பொதுமக்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் அறிந்து கொள்ளும் வகையில், ஊதிய சட்டத் தொகுப்பு விதிகள், தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு விதிகள், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு விதிகள் ஆகிய மூன்று சட்டத் தொகுப்புகளுக்கான மாநில வரைவு விதிகள் தமிழக அரசின் அசாதாரண அரசிதழில் 11-04-2022 அன்று ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான தமிழாக்கம் வெளியிடப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில், ஊதிய சட்டத் தொகுப்பு விதிகள் மற்றும் தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு விதிகள் குறித்த தொழிற் சங்கங்களுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்ற மாத இறுதியில் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றதாகவும், கூட்டத்திற்கான அறிவிப்பு தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தால் தமிழில் அனுப்பப்பட்ட நிலையில், மாநில வரைவு விதிகளின் தமிழாக்கம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த தொழிற்சங்கங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
தமிழ் மொழியில் மாநில அரசின் வரைவு விதிகள் வழங்கப்பட்டால்தான், 29 தொழிலாளர் சட்டங்களை உள்ளடக்கிய நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் உள்ள சாதக, பாதகங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப தங்களது ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்க முடியும் என்றும், மாநில வரைவு விதிகளில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை ஒவ்வொரு தொழிலாளியும், தொழிற்சங்கங்களைச் சார்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவை தமிழில் கண்டிப்பாக வெளியிடப்பட வேண்டும் என்றும், அப்பொழுதுதான், சட்டத் தொகுப்புகளில் உள்ள முக்கிய அம்சங்களைப் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் தொழிலாளர் நல அதிகாரிகளுடன் கலந்துரையாடி, ஆலோசனைகளைத் தெரிவிக்க முடியும் என்றும், சம்பிரதாயத்திற்காக கூட்டத்தைக் கூட்டுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தொழிலாளர்களும், தொழிற்சங்க வாதிகளும் கூறுகின்றனர்.
ஆங்கிலத்தில் ஐம்பது பக்கம், நூறு பக்கங்களுக்கு மேல் இருக்கும் ஒவ்வொரு தொகுப்பையும் சாதாரண தொழிலாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் படித்து புரிந்து கொள்வது என்பது கடினமான ஒன்று. மூச்சுக்கு மூச்சு தமிழ், தமிழ் என்று சொல்லிக் கொண்டு, தொழிலாளர்களுக்கான சட்டத் தொகுப்புகளை தமிழில் வெளியிடாத திமுக அரசின் நடவடிக்கை 'சொல்வது ஒன்று செய்வது ஒன்று' என்பது போல் உள்ளது. ஒரு வேளை இதுவும் 'திராவிட மாடல்' போலும். திமுக அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மேற்படி மூன்று மாநில வரைவு விதிகளை தமிழில் வெளியிடவும், இனி வருங்காலங்களில் ஆங்கில விதிகள் வெளியிடப்படும் அதே சமயத்தில் அதற்கு இணையான தமிழாக்கம் வெளியிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.