< Back
மாநில செய்திகள்
ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோல் விலையை குறைத்தது திமுக அரசு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

"ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோல் விலையை குறைத்தது திமுக அரசு" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
24 May 2022 5:36 PM IST

மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை குறைக்கும் போது, மாநில வரியும் குறையும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள செல்லியம்பாளையத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகள் குறித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

"சேலம் மாவட்டத்தில் 2-வது பெரிய நகரம் ஆத்தூர். இது கோட்டையும், கோவிலும் அமைந்த ஊர். இந்த ஊரில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அதிமுக ஆட்சியில் ஒரே ஒரு முறைதான் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு சரியாக ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இயற்கை திமுக ஆட்சிக்கு கொடுத்த வரத்தால், இந்தாண்டு மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என அறிவித்தபோது, இதற்கு வாய்ப்பே இல்லை என்றார்கள். ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோல் விலையை குறைத்தது திமுக அரசு. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை குறைக்கும் போது, மாநில வரியும் குறையும்.

அறநிலையத்துறையின் மூலம் கோயில்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை ரூ.2,500 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. உண்மையான ஆன்மிகவாதிகள் திமுகவை ஆதரிக்க வேண்டும்."

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்