< Back
மாநில செய்திகள்
தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!
மாநில செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!

தினத்தந்தி
|
11 Jan 2024 10:52 AM IST

பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

நெல்லை,

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது.

மலைப் பகுதிகளில் நீடித்து வரும் கனமழையால், பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகளுக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு, தற்போது வினாடிக்கு 2 ஆயிரத்து 538 கன அடி நீர்வரத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணைக்கு, வினாடிக்கு 2,547 கன அடி தண்ணீர் வருகிறது.

அதன்படி, பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 547 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 547 கன அடி தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. தற்போது தாமிரபரணி ஆற்றில் சுமார் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகள்