செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தம்
|சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
குன்றத்தூர்,
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த மாதம் உருவான புயல் மற்றும் பருவமழை தாக்கத்தின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் பாதுகாப்பு கருதி கடந்த அக்டோபர் மாதம் 8-ந்தேதி முதற்கட்டமாக 500 கன அடி உபரி நீர், ஏரியில் இருந்து மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது.
பின்னர் மெல்ல, மெல்ல நீர் வரத்து அதிகரித்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகபட்சமாக நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக இருந்து வந்த நிலையில் உபரி நீர் திறப்பு 8 ஆயிரம் கன அடியாக இருந்தது.தொடர்ந்து 2½ மாதங்களாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரானது மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 2½ மாதங்கள் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
தற்போது ஏரியின் நீர்மட்ட உயரம் 22.24 அடியும், மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 182 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. நீர்வரத்து 56 கன அடியாக உள்ளது.
தொடர்ந்து ஏரியின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரி, சிக்கராயபுரம் கல்குவாரியில் நீர் நிறைந்து காணப்படுவதால் இந்த முறை கோடை காலத்தில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.