< Back
மாநில செய்திகள்
சினிமா வாய்ப்பு கேட்டு வந்த பெண்களுடன் இயக்குனர் உல்லாசம்
சேலம்
மாநில செய்திகள்

சினிமா வாய்ப்பு கேட்டு வந்த பெண்களுடன் இயக்குனர் உல்லாசம்

தினத்தந்தி
|
8 Sept 2022 1:45 AM IST

சேலத்தில் ஆபாச படம் எடுத்த வழக்கில், சினிமா வாய்ப்பு கேட்டு வந்த பெண்களுடன் இயக்குனர் உல்லாசம் அனுபவித்ததாக போலீஸ் விசாரணையில் உதவியாளர் கூறியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சேலத்தில் ஆபாச படம் எடுத்த வழக்கில், சினிமா வாய்ப்பு கேட்டு வந்த பெண்களுடன் இயக்குனர் உல்லாசம் அனுபவித்ததாக போலீஸ் விசாரணையில் உதவியாளர் கூறியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.சேலத்தில் ஆபாச படம் எடுத்த வழக்கில், சினிமா வாய்ப்பு கேட்டு வந்த பெண்களுடன் இயக்குனர் உல்லாசம் அனுபவித்ததாக போலீஸ் விசாரணையில் உதவியாளர் கூறியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சினிமா இயக்குனர் கைது

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் வேல்சத்ரியன் (வயது 38). சினிமா இயக்குனரான இவர், இளம்பெண்களை நடிகை ஆக்குவதாக கூறி அவர்களை ஆபாச படம் எடுத்த புகாரில் சூரமங்கலம் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவரின் பெண் உதவியாளராக பணிபுரிந்து வந்த ஜெயஜோதியும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கைது செய்யப்பட்ட இயக்குனர் வேல்சத்ரியன் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஏராளமான பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி ஆபாச படம் எடுத்ததாகவும், மேலும் 400-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இயக்குனர் வேல்சத்ரியனின் ஸ்டூடியோவில் இருந்து கைப்பற்றப்பட்ட ஹார்டு டிஸ்க், மடிக்கணினி, பென்டிரைவ் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

பெண் உதவியாளரிடம் விசாரணை

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்சத்ரியனின் உதவியாளர் ஜெயஜோதியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு சேலம் கூடுதல் மகளிர் விரைவு கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

இதையடுத்து ஜெயஜோதியிடம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் நாளில் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் அனைத்தையும் போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர். அப்படி இருந்தும் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

ஏரோநாட்டிக்கல் படித்தவர்

அதாவது, போலீஸ் விசாரணையின் போது ஜெயஜோதி கூறியதாக வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஜெயஜோதி, ஏரோ நாட்டிக்கல் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். அவரின் சகோதரர் ராஜஸ்தானில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலை செய்து வருகிறார். ஜெயஜோதி சட்டப்படிப்பு படிப்பதற்காக சேலம் வந்தபோது, இயக்குனர் வேல்சத்ரியனுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரது அலுவலகத்தில் சமையல் செய்வதற்காக அறை மற்றும் இதர வசதிகள் இருந்ததால் அங்கேயே ஜெயஜோதி தங்கி வேலை செய்து வந்துள்ளார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு பயோடேட்டா கொடுத்தவர்களை தொடர்பு கொண்டு பேசி வரவழைப்பது, அவர்களுக்கு வசனங்களை பேச சொல்லி கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை ஜெயஜோதி செய்து வந்துள்ளார்.

பெண்களுடன் உல்லாசம்

அப்படி அலுவலகத்துக்கு சினிமா வாய்ப்பு கேட்டு வந்த பெண்களை வேல்சத்ரியன், நடிகை ஆக்குகிறேன் என்று கூறி ஆபாச படம் எடுத்ததுடன், சில பெண்களுடன் உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் இதுதொடர்பாக ஜெயஜோதியிடம் மேலும் தகவல்களை போலீசார் சேகரிக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் சிறையில் உள்ள வேல்சத்ரியனை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போதுதான், எத்தனை பெண்களுடன் வேல்சத்ரியன் தனிமையில் இருந்துள்ளார் என்ற விவரம் தெரிய வரும் என்று போலீசார் கூறினர். அப்படி பெண்களுடன் வேல் சத்ரியன் தனிமையில் இருந்த விவரம் உண்மை என தெரியும்பட்சத்தில் அவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ரகசிய வாக்குமூலம்

இதற்கிடையே வேல்சத்ரியனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், நேற்று முன்தினம் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது. அந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இயக்குனரின் அலுவலகத்தில் மேலும் சில பெண்களும், உதவியாளர்களும் பணிபுரிந்து வந்துள்ளனர். அந்த வகையில் கேமராமேன், மேலும் 2 பெண் உதவியாளர்களை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்