விழுப்புரம்
ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றும் பணி மீண்டும் தொடங்கியது
|விழுப்புரம் மருதூர் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கி நடந்தது.
விழுப்புரம்,
விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வி.மருதூர் ஏரி. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரி 114 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த ஏரியின் பெரும் பகுதியையும், ஏரிக்கரை பகுதியையும் உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமின்றி வெளியூரை சேர்ந்தவர்களும் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளனர்.
தற்போது இந்த ஏரி அமைந்துள்ள பகுதி மற்றும் ஏரிக்கரை பகுதியை மொத்தம் 390 பேர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி சுமார் 40 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.
இந்த ஆக்கிரமிப்புகளால் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி நாளுக்கு நாள் சுருங்கி தற்போது வெறும் 70 ஏக்கர் பரப்பளவு மட்டுமே உள்ளது. மேலும் இவர்களில் பலர் ஏரிக்கு நீர்வரத்து வரக்கூடிய வாய்க்காலையும் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளதால் மழைக்காலங்களில் ஏரிக்கு நீர்வரத்து வருவதும் தடைபட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி வி.மருதூர் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 390 வீடுகளையும் அகற்ற முடிவு செய்த மாவட்ட நிர்வாகம், அந்த ஆக்கிரமிப்பு வீடுகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ளும்படி பொதுப்பணித்துறை மூலம் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புதாரர்களுக்கு அறிவிப்பு விடுத்தது.
ஆக்கிரமிப்பு அகற்றம்
இருப்பினும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள அவர்கள் யாரும் தாமாக முன்வராததால் கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
அப்போது பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் தீக்குளிக்கவும் முயன்றனர். இதனிடையே சிலர், வீடுகளை காலிசெய்ய மேலும் சில நாட்கள் கால அவகாசம் கேட்டதால் 2 நாட்கள் மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் அப்பணி தொடர்ந்து நடைபெறாமல் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
மீண்டும் தொடங்கியது
இந்நிலையில் மருதூர் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் தலைமையில் வருவாய்த்துறையினரும் மற்றும் பொதுப்பணித்துறையினரும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் ராஜீவ்காந்தி நகர், மணிநகர் பகுதியில் 11 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.