< Back
மாநில செய்திகள்
உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதிநிலைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதிநிலைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும்

தினத்தந்தி
|
27 July 2023 12:15 AM IST

உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதிநிலைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும்

உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதிநிலைமைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.

ஒன்றியக்குழு கூட்டம்

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஆகியோ முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-

முத்துலட்சுமி (அ.தி.மு.க.): கொளப்பாடு ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாரப்படும் மணல்களை டிராக்டர்களில் ஏற்றி செல்லும் போது சாலைகளில் கொட்டுவதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும்.

ஞானசேகரன் (மா.கம்யூ):நத்தப்பள்ளம் ஊராட்சியில் அங்காடி கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு

ரம்யா (அ.தி.மு.க.): பண்ணத்தெரு ஊராட்சி பகுதிகளில் குடிநீர் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனை சரி செய்ய வேண்டும்.

செல்விசேவியர் (தி.மு.க.): நீர்முளை ஊராட்சி பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பொதுமக்களுக்கு தண்ணீர் சரிவர கிடைப்பதில்லை. அதனை உடனே சரி செய்ய வேண்டும்.

மகேந்திரன் (இ.கம்யூ) : தலைஞாயிறு பகுதிக்கு காவிரி நீர் வராததால், குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

தீபா (அ.தி.மு.க.): அவரிக்காடு ஊராட்சியில் மயான சாலைக்கு செல்லும் வழியில் ஆற்றில் உள்ள மரப்பாலத்தை அகற்றிவிட்டு கான்கிரீட் பாலம் அமைத்து தர வேண்டும்.

சாலையை செப்பனிட வேண்டும்

மாசிலாமணி (தி.மு.க.): வானவன்மகாதேவி பகுதியில் பிலாற்றங்கரை செல்லும் சாலையை செப்பனிட வேண்டும்.

உதயகுமார் (தி.மு.க.) :நாலுவேதபதியில் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும்.

கஸ்தூரி (தி.மு.க.) : வெள்ளப்பள்ளம் ஊராட்சி பகுதியில் குடிநீருக்காக கைப்பம்பு அமைத்து தர வேண்டும்.

ஒன்றியக்குழு தலைவர்: உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றி தரப்படும்.

வட்டார மருத்துவ அலுவலர்: தலைஞாயிறு அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்களுக்கு அனைத்து விதமான மருந்துகளும் தங்குதடையின்றி கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

முடிவில் அலுவலக மேலாளர் மகேஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்