< Back
மாநில செய்திகள்
வெண்ணங்குழி ஓடையை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த கோரிக்கை
அரியலூர்
மாநில செய்திகள்

வெண்ணங்குழி ஓடையை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த கோரிக்கை

தினத்தந்தி
|
21 May 2022 1:10 AM IST

வெண்ணங்குழி ஓடையை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீன்சுருட்டி:

வெண்ணங்குழி ஓடை

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சலுப்பை கிராமத்தில் இருந்து வெண்ணங்குழி‌ கிராமத்தின் வழியாக வெண்ணங்குழி ஓடை செல்கிறது. இதில் சலுப்பை கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் இருந்து செல்லும் இந்த ஓடை அரியலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் செல்கிறது. கடலூர் மாவட்டத்தில் இந்த ஓடையானது வடவாற்றில் கலக்கிறது.

அரியலூர் மாவட்டத்தில் இருந்து செல்லும் இந்த ஓடையானது, கடலூர் மாவட்ட எல்லையில் சேரும் இடத்தில் இருந்து வடவாற்றில் சென்று சேரும் இடம் வரை கடலூர் மாவட்ட பொதுப்பணி துறையினர் ஆண்டுதோறும் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி வருகின்றனர்.

தூர்வார வேண்டும்

ஆனால் அரியலூர் மாவட்ட பகுதியில் வெண்ணங்குழி ஓடை பகுதியை கருவேல மரங்கள், புற்கள் ஆக்கிரமித்து, புதர்மண்டி காணப்படுகிறது. இப்பகுதியிலும் பொதுப்பணி துறையினர் வெண்ணங்குழி ஓடையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றி, தூர்வாரி, இரண்டு பக்கமும் உள்ள கரைகளை பலப்படுத்தி தண்ணீர் பாசனம் பெறும் வகையில் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஓடை மூலம் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது.

ஆனால் ஓடை தூர்வாரப்படாததால் பாசன வசதி பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே அரியலூர் மாவட்டத்தில் இந்த ஓடையை உடனடியாக தூர்வாரி, கருவேல மரங்களை அகற்றி, கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்