மரணமடைந்த காங்கிரஸ் தலைவர் புகார் அளிக்கவில்லை - போலீசார் தகவல்
|காங்கிரஸ் தலைவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை,
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நேற்று பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு கடிதம் மட்டும் கிடைத்துள்ளது.
அந்த கடிதமானது கடந்த 30-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் 'லெட்டர் பேடில்' 'மரண வாக்குமூலம்' என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எழுதப்பட்டு இருந்தது. அதில், தனக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறது. எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் இந்த கடிதத்தில் நான் குறிப்பிட்ட நபர்கள் தான் காரணம் என்று எழுதப்பட்டு இருந்தது.
ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதற்காக 7 தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பின்னரே அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். தற்போது சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, மரணமடைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் ஏப்ரல் 30 ந்தேதி அன்று புகார் அளிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், மரண வாக்குமூலம் என்ற பெயரில் உள்ள புகார் மனு எஸ்.பி.யிடம் அளிக்கப்படவில்லை. மே 2-ம் தேதி அன்றுதான் ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜெப்ரின் தனது தந்தையை காணவில்லை என உவரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளிக்க வந்தபோது ஜெப்ரின் கடிதத்தில் 30.04.2024 என போடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை அதற்கு முன் யாரிடமும் ஜெயக்குமார் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.