கள்ளக்குறிச்சி
மின்வேலியில் சிக்கி செத்த 2 மாடுகளின் உடல்கள் குழிதோண்டி புதைப்பு
|சங்கராபுரம் அருகே மின்வேலியில் சிக்கி செத்த 2 மாடுகளின் உடல்களை குழிதோண்டி புதைத்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே கல்வராயன்மலையில் உள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்த உதயகுமார் (வயது 32) தனது விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டு சாகுபடி செய்து பராமரித்து வந்தார். இந்த பயிர்களை காட்டுப்பன்றிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக விவசாய நிலங்களை சுற்றி மின்வேலி அமைத்திருந்தார். இந்த மின்வேலியில் சிக்கி 2 மாடுகள் செத்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உதயகுமார் தனது நண்பர்களான குபேந்திரன், சோழன், செல்வமணி ஆகியோருடன் சேர்ந்து, யாருக்கும் தெரியாமல் செத்த மாடுகளின் உடல்களை குழி தோண்டி புதைத்துள்ளார்.
இது பற்றிய ரகசிய தகவல் புதுப்பாலப்பட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. அதன்பேரில் வனச்சரகர் பிரபாகரன் தலைமையில் வனவர் பெருமாள், வனக்காப்பாளர்கள் மணிகண்டன், சூரியபிரகாஷ் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் மின்வேலியில் சிக்கி இறந்த 2 மாடுகளை புதைத்தது தெரிந்தது. இதையடுத்து புதைத்த மாடுகளை தோண்டி எடுத்து கால்நடை டாக்டர் தங்கராசு தலைமையிலான குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் அந்த மாடுகளை அங்கேயே புதைத்தனர். தொடர்ந்து உதயகுமாரை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் செல்வமணி, குபேந்திரன், சோழன் ஆகியோரை தேடி வருகின்றனர்.