< Back
மாநில செய்திகள்
தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்று நாடகமாடிய மகள் - காரணம் என்ன..?
மாநில செய்திகள்

தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்று நாடகமாடிய மகள் - காரணம் என்ன..?

தினத்தந்தி
|
2 May 2024 2:54 AM IST

தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்று நாடகமாடிய மகளை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் கடுக்கரை ஆலடி காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 46), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

சுரேஷ்குமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் 4 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ்குமாரை விட்டு அவருடைய மனைவி விலகினார். அப்போது இளைய மகளையும் உடன் அழைத்துச் சென்றார்.

மூத்த மகள் ஆர்த்தி (21) மட்டும் சுரேஷ்குமாருடன் இருந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி சுரேஷ்குமார் வீட்டில் அதிகமாக மதுகுடித்து விட்டு இறந்தநிலையில் கிடப்பதாக ஆர்த்தி பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் ஆர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பிரேத பரிசோதனையில், சுரேஷ்குமாரின் தலையில் காயம் மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டிருந்த திடுக்கிடும் தகவல் வெளியானது. இதனால் போலீசாருக்கு சுரேஷ்குமார் மகள் ஆர்த்தி மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே ஆர்த்தியை பிடித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தான் தந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து போலீசார் ஆர்த்தியை கைது செய்தனர். ஆர்த்தி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், "என்னுடைய தந்தை சுரேஷ்குமார் மதுகுடித்து விட்டால் சகட்டுமேனிக்கு தகாத வார்த்தைகளை பேசுவார். சம்பவத்தன்று அதே மாதிரி என்னிடம் பேசியதோடு தாக்க முயன்றார். இதனால் ஆத்திரத்தில் நான் அவரை தள்ளி விட்டேன். பின்னர் அங்கு கிடந்த கட்டையால் தலையில் தாக்கினேன். எனினும் அவர் என்னை தொடர்ந்து திட்டினார். இதனால் அவரை பேச விடாமல் கழுத்தை நெரித்தேன். இதில் மயங்கி விழுந்து விட்டார். பின்னர் அவர் இறந்தது தெரியவந்தது. இந்த கொலையை மறைக்க, தந்தை அதிக மதுகுடித்து விட்டு இறந்து விட்டதாக நாடகமாடினேன். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை, போலீசாரின் விசாரணையால் மாட்டிக் கொண்டேன்" என்று அதில் ஆர்த்தி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்