இந்தியாவை சூழ்ந்துள்ள இருள் 4-ந்தேதி அகலும் - திருமாவளவன் பேட்டி
|ஜூன் 4ம் தேதி புதிய விடியல் மலர உள்ளதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., தெரிவித்துள்ளார்.
சென்னை,
வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., சென்னை ராஜா மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வரலாற்று புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;
"இது முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வரலாறு என்று சொல்வதை விட தமிழர்களின் வரலாறு என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். கருணாநிதி ஒரு போராளியாக பிறந்து, போராளியாக வாழ்ந்து, போராளியாகவே மறைந்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான சிற்பி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.
தமிழ்நாட்டில் 100 சதவீதம் பா.ஜ.க. வெற்றிபெற போவதில்லை. மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு 'இந்தியா'கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு எடுக்கப்படும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளை நாம் ஒரு போதும் பொருட்படுத்தவில்லை. நாளை மறுநாள் அதற்கு ஒரு முடிவு தெரியும். ஜூன் 4ம் தேதி புதிய விடியல் மலர உள்ளது. இந்தியாவை சூழ்ந்த இருள் அகலும்."
இவ்வாறு அவர் பேசினார்.