நாகப்பட்டினம்
சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
|தலைஞாயிறு-வேட்டைக்காரணிப்பு இடையே சேதமடைந்த சாலையை சீரமைகக் வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்மேடு,:
குண்டும், குழியுமான சாலை
தலைஞாயிறு கடைத்தெருவில் இருந்து வேட்டைக்காரணிருப்பு வரை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக தினந்தோறும் பஸ்கள், லாரி, கார், மோட்டார் சைக்கிள்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் தலைஞாயிறில் இருந்து நாகப்பட்டினம், வேதாரண்யத்திற்கு செல்வதற்கு இந்த சாலையை தான் பயன்படுத்த வேண்டும். மேலும் வேதாரண்யத்தில் உள்ள தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், கோர்ட்டு மற்றும் அரசு கல்லூரி ஆகியவற்றிற்கு செல்வதற்கு இந்த சாலையை தான் பயன்படுத்த வேண்டும்.
கீழே விழுந்து காயம்
இந்த குண்டும், குழியுமான சாலையில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் பலர் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தலைஞாயிறிலிருந்து வேட்டைக்காரணிருப்பு வரை செல்லும் சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்து தரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.