< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் ெபட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் ெபட்டி

தினத்தந்தி
|
9 Oct 2023 12:15 AM IST

தினத்தந்தி புகார் ெபட்டி

வாகன ஓட்டிகள் அவதி

நேசமணிநகர் பகுதியில் சி.எஸ்.ஐ. ஆலயம் அருகில் இருந்து நெசவாளர் காலனிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையில் மரக்கிளை முறிந்து கிடக்கிறது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கும் மரக்கிளையை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாதன், நேசமணிநகர்.

விபத்து ஏற்படும் அபாயம்

கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் பெருங்குடி பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால் அசம்பாவிதம் நடப்பதற்கு முன் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஜி, தச்சக்கோட்டுக்குழி.

சுகாதார சீர்கேடு

பூதப்பாண்டி வடக்குத்தெரு பகுதியில் அழகிய சோழவநங்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் புலிவீரன்குளம் அமைந்துள்ளது. தற்போது இந்த குளம் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிப்பதுடன், அங்கு சிலர் குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பக்தர்கள் நலன்கருதி குளத்தை தூர்வாருவதுடன், அங்கு குப்பைகளை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணசாமி, பூதப்பாண்டி.

வடிகால் ஓடை அமைக்கப்படுமா?

புத்தளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த பகுதியில் விவசாய நிலங்களில் மழைகாலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பு உள்ளிட்ட பல விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், தென்னை உள்ளிட்ட பயிர்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீர் வடிந்தோட அந்த பகுதியில் வடிகால் ஓடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜாராம், இலந்தைவிளை.

நடவடிக்கை தேவை

பூதப்பாண்டி பேரூராட்சி திட்டுவிளை கிரசன்ட் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலையோரத்தில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. மழை நேரத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையோரத்தில் வடிகால் ஓடை அமைத்து சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க ேவண்டும்.

-முகம்மதுரபீக், திட்டுவிளை.

சேதமடைந்த மின்கம்பம்

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் இருந்து வடசேரி போலீஸ் நிலையத்துக்கு செல்லும் சாலையில் இலந்தையடி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிரே சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் மிகவும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால், அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பால்ராஜ், கிருஷ்ணன்கோவில்.

மேலும் செய்திகள்