தஞ்சாவூர்
டீக்கடையில் சிலிண்டர் வெடித்தது; இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசம்
|டீக்கடையில் சிலிண்டர் வெடித்தது; இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசம்
தஞ்சை கீழவாசல் பகுதியில் டீக்கடையில் பலகாரம் சுடும்போது சிலிண்டர் வெடித்ததில் 2 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசம் அடைந்தன. உரிமையாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது..
டீக்கடையில் சிலிண்டர் வெடித்தது
தஞ்சை கீழவாசல் பகுதியில் மக்கள் அதிகமாக நடமாடக்கூடிய பகுதியான நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருபவர் பாலமுருகன். நேற்று இவரது கடை முன்பு கியாஸ் சிலிண்டர் அடுப்பில் ஊழியர் ஒருவர் பலகாரம் சுட்டுக்கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியானது. இதனை பலகாரம் சுடுபவர் கவனிப்பதற்குள், கியாஸ் அழுத்தம் காரணமாக ரெகுலேட்டர் வெடித்து சிதறி தீ பரவத்தொடங்கியது.
இருசக்கர வாகனங்கள் எரிந்தன
இதனையடுத்து டீ கடைக்குள் டீ குடித்துக்கொண்டு இருந்தவர்கள் மற்றும் கடைக்கு வந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். மேலும் அக்கம், பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் கியாஸ் காரணமாக தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இது குறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் தீ எதிர்பாராத விதமாக டீக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 இருசக்கர வாகனஙகள் மீதும் பரவியது. இதில் 2 இரு சக்கர வாகனங்களும் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது.
போலீசார் விசாரணை
தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கடையின் உரிமையாளர் பாலமுருகனுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தீ விபத்து குறித்து தஞ்சை நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.