விருதுநகர்
இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு
|கணிதத்தில் 690 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றுள்ளதால் இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
கணிதத்தில் 690 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றுள்ளதால் இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
தரவரிசை பட்டியல்
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-
என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடும்போது மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் பெற்ற மதிப்பெண்களை 200-க்கு மாற்றி அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.
இதனை கட் ஆப் மதிப்பெண் என்று அழைப்பர். ஆண்டுதோறும் இதன் அடிப்படையில் தான் சமீபகாலமாக என்ஜினீயரிங் கல்லூரிகளில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கான கணக்கீட்டிற்கு கணித பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியமாகும்.
கணிதத்தில் குறைவு
அந்த வகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணித பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 1,858 பேர் கணித பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 690 பேர் மட்டுமே கணித பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
ஆனாலும் வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேதியியல் பாடத்தில் கடந்த ஆண்டு 1,500 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 3,909 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதேபோன்று இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டு 634 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 813 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கட் ஆப் குறையும்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணித பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை 3 மடங்கு குறைந்துள்ள நிலையில் வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை 2 மடங்கு மட்டுமே அதிகரித்துள்ளது. இதனால் என்ஜினீயரிங் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது..
இதற்கான தரவரிசை பட்டியல் தயாரிப்பின் போது இதன் நிலைமை தெரிய வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.