< Back
மாநில செய்திகள்
கைதான 103 பேருக்கு மேலும் 12 நாட்கள் காவல் நீட்டிப்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கைதான 103 பேருக்கு மேலும் 12 நாட்கள் காவல் நீட்டிப்பு

தினத்தந்தி
|
1 Aug 2022 11:48 PM IST

கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக கைதாகி சிறையில் இருக்கும் 103 பேரின் சிறைகாவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்து கள்ளக்குறிச்சி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது

கள்ளக்குறிச்சி

பள்ளியில் கலவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடத்தி வந்த தொடர் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, அங்கு நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள் மற்றும் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்து சூறையாடினர்.

108 பேர் கைது

இந்த கலவர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சின்னசேலம் போலீசார் கடந்த 18-ந்தேதி 108 பேரை கைது செய்து கள்ளக்குறிச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் கோர்ட்டு உத்தரவுப்படி திருச்சி மத்திய சிறையில் 15 நாட்கள் அடைக்கப்பட்டனர்.இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் மாணவியின் மர்ம சாவு வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் கலவர வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி மர்ம சாவு, கலவரம் தொடர்பாக நேற்று முன்தினம் வரை 322 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காவல் நீட்டிப்பு

இந்த நிலையில் சின்னசேலம் போலீசாரால் கைதான 108 பேரின் சிறை காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து அவர்களை மீண்டும் கள்ளக்குறிச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் கோர்ட்டு வளாகம், கச்சேரி சாலை, நான்கு முனை சந்திப்பு உள்பட பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஆனால் கைதான 108 பேரும் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்படவில்லை. மாறாக திருச்சி சிறையில் இருந்தபடியே காணொலி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலம் 103 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களின் சிறை காவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்து கள்ளக்குறிச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் மீண்டும் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 5 பேரை மட்டும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்