ராமநாதபுரம்
மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்
|மோட்டார் சைக்கிளால் மோதி மனைவியை கீழே தள்ளி கழுத்தை அறுத்து கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
முதுகுளத்தூர், செப்.23-
மோட்டார் சைக்கிளால் மோதி மனைவியை கீழே தள்ளி கழுத்தை அறுத்து கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
குடும்ப தகராறு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம் தெற்கு குடியிருப்பை சேர்ந்தவர் செல்வம்(வயது 35). இவருடைய மனைவி லட்சுமி(33). இவர்களுக்கு அருண்குமார்(8) என்ற மகனும், தன்ஷியா(5) என்ற மகளும் உள்ளனர். செல்வத்துக்கு மது பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். லட்சுமி அதே பகுதியில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். செல்வம் சென்னையில் டிரைவராக இருந்தார்..
இந்த நிலையில் செல்வம் தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். அதற்கு லட்சுமி மறுத்ததாக ெதரிகிறது. இதனால் அவரை கொலை செய்ய செல்வம் திட்டமிட்டார்.
கழுத்தை அறுத்துக்கொலை
இந்நிலையில் நேற்று லட்சுமி 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த செல்வம் நடந்து சென்ற லட்சுமி மீது மோட்டார்சைக்கிளால் மோதினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லட்சுமியை அவர் வைத்திருந்த மண்வெட்டியை எடுத்து லட்சுமியின் தலையில் செல்வம் தாக்கினார்.
மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லட்சுமியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து செல்வம் அங்கிருந்து சென்று விட்டார். இந்த கொலையை பார்த்த அந்த வழியாக வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
போலீசில் சரண்
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே செல்வம் கீழத்தூவல் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.