மயிலாடுதுறை
பொதுமக்களை அச்சுறுத்திய முதலை
|மணல்மேடு அருகே பொதுமக்களை அச்சுறுத்திய முதலை 18 நாட்களுக்கு பிறகு குளத்தில் இருந்து பிடிபட்டது.
மணல்மேடு:
மணல்மேடு அருகே பொதுமக்களை அச்சுறுத்திய முதலை 18 நாட்களுக்கு பிறகு குளத்தில் இருந்து பிடிபட்டது.
பொதுமக்களை அச்சுறுத்திய முதலை
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே வரதம்பட்டு கிராமத்தில் சுமார் 2½ ஏக்கர் பரப்பளவில் ஓமக்குளம் உள்ளது. கடந்த 12-ந் தேதி ஒரு முதலை பழவாற்றின் வழியாக வந்து இந்த குளத்தில் புகுந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன், சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் ஆகியோர் ஓமக்குளத்துக்கு சென்று, 3 இடங்களில் பள்ளம் தோண்டி, கோழி இறைச்சியை வைத்தும், மீன் வலைகளை விரித்தும் முதலையை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கடந்த 18 நாட்களாக வலையில் முதலை சிக்கவில்லை.
வலையில் சிக்கியது
இந்தநிலையில் 18 நாட்களுக்கு பிறகு நேற்று காலை அந்த முதலை வலையில் சிக்கியது. இதைக்கண்ட கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தொிவித்தனர். இதைத்தொடர்ந்து சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையிலான வனத்துறையினர் ஓமக்குளத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது வலையில் சுமார் 12 கிலோ எடையுடன் 2½ அடி நீளத்தில் பெண் முதலை சிக்கியிருந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்த முதலையை பாதுகாப்பாக மீட்டு, அணைக்கரை ஆற்றுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக ஆற்றில் விட்டனர். பொதுமக்களை அச்சுறுத்திய முதலை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.