< Back
மாநில செய்திகள்
குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
5 March 2023 6:53 PM GMT

மாசி மக திருவிழாவையொட்டி சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மாசி மக திருவிழா

பெரம்பலூர் மாவட்டத்தின் வடக்கு எல்லையான வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள திருவாலந்துறை, திருமாந்துறை, திருவட்டத்துறை என 7 துறைகள் உள்ளது. இதில் 3-வது துறையாக விளங்குகிற சு.ஆடுதுறை கிராமத்தில்தான் குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகம் நட்சத்திர நாளில், மாசி மக திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி மக திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை பஞ்ச மூர்த்திகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட 18 வகையான மூலிகைப்பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தேரோட்டம்

பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க சாமி திருத்தேருக்கு கொண்டுவரப்பட்டார். பின்னர் திருஷ்டி பூஜைகள் நடத்தப்பட்டு நாதஸ்வரம் இசை, மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் கோவில் முக்கியஸ்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் அதன் நிலையை அடைந்தது. தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) மாசி மகத்தையொட்டி சுவாமி-அம்பாள் புறப்பாடு நடக்கிறது.

மேலும் செய்திகள்