பெரம்பலூர்
வங்கிகளுக்கான கடன் இலக்கு ரூ.4 ஆயிரத்து 267 கோடி நிர்ணயம்
|பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கிகளுக்கான கடன் இலக்கு ரூ.4 ஆயிரத்து 267 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் வங்கிகளுக்கான 2022-23-ம் நிதி ஆண்டிற்கான மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக, ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கியின் வழிகாட்டுதலின்படி தயார் செய்யப்பட்ட கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கலெக்டர் அலுவலகத்தில் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு 2022-23-ம் நிதி ஆண்டிற்கு ரூ.4 ஆயிரத்து 267 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் விவசாய கடன்களுக்காக ரூ.3 ஆயிரத்து 470 கோடியும், சிறு குறு தொழிலுக்கு ரூ.450 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ.347 கோடியும் கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.147 கோடி வங்கிகளுக்கு கூடுதலான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை படி அனைத்து வங்கிகளும் இலக்கினை அடைய வேண்டும். வங்கியாளர்கள் அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட்டு, மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும், என்றார்.