சென்னை
திரு.வி.க.நகரில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
|திரு.வி.க.நகரில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை திரு.வி.க.நகர் மண்டலம் 64-வது வார்டுக்கு உட்பட்ட வீனஸ் நகர் முதல் பிரதான சாலை மற்றும் 200 அடி சாலை, டெம்பிள் பள்ளி சந்திப்பில் ரூ.4.28 கோடி மதிப்பீட்டிலும், 65-வது வார்டுக்கு உட்பட்ட பூம்புகார் நகர் 5-வது தெரு மற்றும் முதல் பிரதான சாலை, கொளத்தூர் பிரதான சாலை (கிழக்கு மற்றும் தெற்கு மாதா தெரு) மற்றும் பேப்பர் மில்ஸ் சாலை (லட்சுமி அம்மன் கோவில் சந்திப்பு மற்றும் வேலவன் நகர் சந்திப்பு) ஆகிய பகுதிகளில் ரூ.7.92 கோடி மதிப்பீட்டிலும், 66-வது வார்டுக்கு உட்பட்ட வேலவன் நகர் பிரதான சாலை, குமரன் நகர் 80 அடி சாலை மற்றும் தணிகாசலம் கால்வாய் பகுதிகளில் ரூ.5.58 கோடி மதிப்பீட்டிலும் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், 68-வது வார்டுக்கு உட்பட்ட ஜெகநாதன் சாலை மற்றும் எம்.எச். சாலை பகுதியில் ரூ.6.28 கோடி மதிப்பீட்டிலும், 67-வது வார்டுக்கு உட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலை குறுக்கே மற்றும் எஸ்.ஆர்.பி. கோவில் வடக்கு பகுதியில் ரூ.13.20 கோடி மதிப்பீட்டிலும் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேற்கண்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை உடனடியாக முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.