< Back
மாநில செய்திகள்
புதிய பஸ் நிலைய கட்டிட பணிகள் விரைவில் தொடங்கும்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

புதிய பஸ் நிலைய கட்டிட பணிகள் விரைவில் தொடங்கும்

தினத்தந்தி
|
24 Jun 2023 12:15 AM IST

ராமநாதபுரத்தில் ரூ.20 கோடியில் புதிய பஸ் நிலைய கட்டிட பணிகள் விரைவில் தொடங்குகிறது. அங்கு அத்தியாவசிய கடைகளுக்கு தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளத

ராமநாதபுரத்தில் ரூ.20 கோடியில் புதிய பஸ் நிலைய கட்டிட பணிகள் விரைவில் தொடங்குகிறது. அங்கு அத்தியாவசிய கடைகளுக்கு தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

புதிய பஸ் நிலையம்

ராமநாதபுரம் நகரில் முன்பு ரெயில்நிலையம் எதிரில் பஸ்நிலையம் செயல்பட்டு வந்தது. இதன்பின்னர் மக்கள் தொகை பெருக்கம், மாவட்ட வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களினால் பழைய பஸ்நிலையம் போதிய வசதிகள் இன்றி இருந்ததால் புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்படி கடந்த 1986-ம் ஆண்டு ராமநாதபுரம் நகர் மைய பகுதியில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டது. இந்த பஸ்நிலையம் அப்போதைய மக்கள் தொகை மற்றும் பஸ்களின் எண்ணிக்கைக்கு போதுமானதாக இருந்தது. ராமநாதபுரத்தில் இருந்து மதுரை, சென்னை, திருச்சி, ராமேசுவரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இங்கிருந்து சென்று வந்தன. மக்களின் தேவை அதிகரித்ததன் காரணமாக பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் ராமநாதபுரம் பஸ்நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லவும் பயணிகள் ஏறிச்செல்லவும் நிற்கவும் முடியாமல் சிரமம் ஏற்பட்டு வந்தது.

கடைகளை காலி செய்ய உத்தரவு

இதன் காரணமாக புதிய பஸ்நிலையம் கட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரூ.20 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி ராமநாதபுரம் புதிய பஸ்நிலையத்தை இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் பஸ்நிலையம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. பஸ் நிலையம் கட்டும்பணி விரைவில் தொடங்க உள்ளதால் பஸ்நிலையத்தில் உள்ள கடைகளை வருகிற 26-ந் தேதிக்குள் காலி செய்ய நகராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடைகளை காலி செய்ததும் பஸ்நிலைய கட்டிடங்களை இடிக்கும் பணி உடனடியாக தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய பஸ்நிலையம் கட்டும் வரை பஸ்கள் அனைத்தும் பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து இயக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

கூடுதல் வசதிகள்

இதுகுறித்து நகர்மன்ற தலைவர் கார்மேகம் கூறியதாவது:-

புதிய பஸ்நிலையம் தற்போதைய பஸ்நிலைய பரப்பளவில் கூடுதல் வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இதற்காக கடைகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் சென்றுவரும் வகையில் அங்கு சாலைகள், கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. புதிய பஸ்நிலையத்தில் உள்ள 45 கடைகளில் வியாபாரிகளின் அனுமதியுடன் தற்போது அத்தியாவசிய தேவையான தினசரி பத்திரிகை விற்பனை செய்ய ஒரு கடை உள்பட 11 கடைகள் மட்டும் வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது. இந்த கடைகளுக்கு தற்காலிக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய பஸ்நிலைய ஏற்பாடு பணிகள் மற்றும் ரெயில்வே மேம்பால அணுகு சாலை முடிவடைந்ததும் அங்கிருந்து பஸ்கள் இயக்கப்படும். அதுவரை புதிய பஸ்நிலையத்தில் இருந்துதான் பஸ்கள் இயக்கப்படும். மூலக்கொத்தளம் பகுதியில் இருந்து மதுரை உள்ளிட்ட புறநகர் பஸ்கள் செல்லும்வகையில் வீட்டுவசதி வாரியத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி வந்ததும் அங்கிருந்து மீதம் உள்ள பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்