< Back
மாநில செய்திகள்
மந்தமாக நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மந்தமாக நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணி

தினத்தந்தி
|
27 Sept 2022 12:15 AM IST

கச்சிராயப்பாளையம் அருகே மந்தமாக நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணியால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே வெங்கடாம்பேட்டை-செம்பட்டாக்குறிச்சி இடையே ஏரி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் போக்குவரத்து வசதிக்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. மழைக்காலங்களில் வெங்கடாம்பேட்டை ஏரியில் இருந்து உபரிநீர் வாய்க்கால் வழியாக வெளியேறும் போது, தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்லும். அந்த நேரத்தில் அங்கு போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து வெங்கடாம்பேட்டை-செம்பட்டாக்குறிச்சி இடையே உள்ள வாய்க்காலின் குறுக்கே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த பல மாதங்களுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால் மேம்பால பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை.

80 சதவீத பணிகள்

இதனிடையே அங்கு போக்குவரத்து வசதிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக மண்சாலையானது மழையால் தற்போது சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அதன் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மேம்பாலம் கட்டும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க கோரி பல முறை கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது வரை சுமார் 80 சதவீதம் அளவுக்கு பணிகள் முடிவடைந்துள்ளது. மழைக்காலம் விரைவில் தொடங்கவுள்ளது. அதற்குள் மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் மழைக்காலத்தில் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் பட்சத்தில் இந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்படும். எனவே வாய்க்கால் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்