மதுரை
கோலாகலமாக நடந்த சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்
|மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக சுந்தரேசுவரருக்கு ராயர் கிரீடம் சூட்டி, ரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக சுந்தரேசுவரருக்கு ராயர் கிரீடம் சூட்டி, ரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
ஆவணி மூலத்திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. மேலும் சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கும், ஆவணி திருவிழாவில் சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும். அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணிமூலத்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் இறைவனின் திருவிளையாடல்களை விளக்கும் சிறப்பு அலங்காரங்கள், கடந்த 19-ந் தேதி முதல் நாள்தோறும் நடந்து வருகின்றன.
சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்
7-ம் நாள் விழாவான நேற்று காலையில் சுவாமி வளையல் விற்ற லீலையில் காட்சி அளித்தார். அதை தொடர்ந்து ஆவணி மூலத்திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நேற்று இரவு ேகாலாகலமாக நடந்தது. அப்போது சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன் எழுந்தருளினர். சுவாமிக்கு 7.45 மணிக்கு ராயர் கிரீடம் சூட்டி, ரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் சுவாமியிடமிருந்து செங்கோலை அவரது பிரதிநிதியாக மீனாட்சி கோவில் தக்கார் பொறுப்பில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை பெற்று சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வலம் வந்தார். பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் சமர்ப்பித்தார்.
இனி சுவாமியின் ஆட்சி
மதுரையில் சித்திரை முதல் ஆடி மாதம் வரை நான்கு மாதம் மீனாட்சி அம்மனும், ஆவணி முதல் பங்குனி வரை 8 மாதங்கள் சுவாமியும் ஆட்சி புரிவதாக ஐதீகம்.
அதன்படி மீனாட்சி ஆட்சி நிறைவுற்று, சுவாமி ஆட்சி பொறுப்பை ஏற்றதை குறிக்கும் வகையில், சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் சுவாமி, அம்மனை தரிசித்தனர்.