திருவள்ளூர்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி
|மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.
சென்னை, மதுரவாயல் அருகே உள்ள நெற்குன்றம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஆதிமூலம் (வயது 54). இவர் அம்பத்தூர் பணிமனையில் இருந்து பிராட்வே முதல் திருநின்றவூர் வரையில் இயக்கப்படும் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் தனது தம்பி கார்த்திகேயன் (50) என்பவரது மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு செங்குன்றம் நோக்கி சென்றார்.
பூச்சிஅத்திப்பேடு-செங்குன்றம் நெடுஞ்சாலையில் வாணியன்சத்திரம் மின்வாரிய அலுவலகம் எதிரே சென்றபோது சாலையில் கொட்டியிருந்த கற்கள் மீது மோட்டார் சைக்கிள் சென்று நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்பொழுது இவர்களுக்கு பின்னால் வந்த லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் ஆதிமூலத்தின் தலையில் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ஆதிமூலம் பலியானார். இதை கண்ட லாரி டிரைவர் லாரியில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.
கார்த்திகேயன் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த வெங்கல் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பலியான ஆதிமூலம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்துக்கு காரணமான லாரியை பறிமுதல் செய்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்