அரசாங்கத்தின் அக்கறையும்...! டாக்டர்களின் அலட்சியமும்...! அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை தரமாக இருக்கிறதா?
|அரசு டாக்டர்களின் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் அளிக்கப்படும் சிகிச்சை தரமாக இருக்கிறதா? என்பது குறித்து நோயாளிகள், பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாட்டு மக்களின் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தும் விதமாக மத்திய-மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. அந்த வகையில் தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டு பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு ரூ.17 ஆயிரத்து 61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஏழை-எளிய, பாமர மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மருத்துவக்கல்லூரிகளுடன் இணைந்த ஆஸ்பத்திரிகள்-61, சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி-1, மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள்-18, வட்டம்/வட்டம் சாரா ஆஸ்பத்திரிகள்-272, ஆரம்ப சுகாதார நிலையங்கள்-1,804, துணை சுகாதார நிலையங்கள்-8 ஆயிரத்து 713, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்-463 ஆகிய எண்ணிக்கையில் ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகின்றன.
'நடமாடும் மருத்துவமனை திட்டம்', 'மக்களை தேடி மருத்துவ திட்டம்', 'இன்னுயிர் காப்போம் திட்டம்' போன்ற புதுமையான திட்டங்களும் மருத்துவத்துறையில் புகுத்தப்பட்டு வருகின்றன.
கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு
மருத்துவத்துறையின் வளர்ச்சி, மேம்பாட்டை கருத்தில் கொண்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் ஒரு சில அரசு டாக்டர்கள் பணியில் அலட்சிய போக்கை கடைபிடித்து அப்பாவி மனித உயிர்களுடன் விளையாடுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
அந்த வகையில் சென்னை பெரியார்நகர் ஆஸ்பத்திரிக்கு கால்தசை பிடிப்புக்கு சிகிச்சை பெற சென்ற வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா (வயது 17) டாக்டர்கள் அளித்த தவறான சிகிச்சையால் தனது காலை இழந்து, பின்னர் உயிர் இழந்திருப்பது அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பிரியாவின் மரணம் மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய களங்கத்தையும், அவப்பெயரையும் உண்டாக்கி உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நிகராக அரிய வகை அறுவை சிகிச்சைகள் அரசு ஆஸ்பத்திரிகளில் நடைபெறுவது சாதனையாக பார்க்கப்படும் வேளையில் தவறான சிகிச்சைக்கு பிரியா பலியாகி இருப்பது மிகுந்த வேதனையாக கருதப்படுகிறது.
நம்பிக்கை இருக்கிறது
இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் அளிக்கப்படும் சிகிச்சை தரமாக இருக்கிறதா? என்பது பற்றி நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளி சத்யா:- எனது சொந்த ஊர் வேலூர் மாவட்டம் ஆற்காடு ஆகும். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கினேன். எனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்து தகடு பொருத்தப்பட்டது. ஆனால் அந்த தகடு முறையாக இல்லாததால் அதனை அகற்றி புதிய தகட்டை பொருத்தி கொள்வதற்காக வந்தேன்.
டாக்டர்கள் கனிவுடனும், அக்கறையுடனும் பரிசோதித்து காலில் கட்டு போட்டு மீண்டும் அடுத்த வாரம் வர சொல்லி இருக்கிறார்கள். வேலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் இந்த தகடு வசதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இந்த ஆஸ்பத்திரி மீது எனக்கும், குடும்பத்தினருக்கும் நம்பிக்கை இருக்கிறது. எனவே அடுத்த வாரம் மீண்டும் சிகிச்சைக்கு வருவேன்.
நோயாளி அசோக்:- எனது சொந்த ஊர் சிதம்பரம் ஆகும். எனது காலில் ரத்த நாளம் அடைப்பு பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதியாகி உள்ளேன். மருத்துவ குறிப்புகளை நன்கு ஆராய்ந்து டாக்டர்கள் சிறப்பாக சிகிச்சை அளிக்கிறார்கள். நர்சுகளும் நல்ல முறையில் கவனித்து கொள்கிறார்கள்.
தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்கு வசதி இல்லாத காரணத்தால் ஏழை-எளிய மக்கள் அரசு ஆஸ்பத்திரிகளை நாடி வருகிறார்கள். அதுபோன்று உடல்நலம் தேறி விடலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த கால்பந்து வீராங்கனை பிரியா அரசு டாக்டர்கள் அளித்த தவறான சிகிச்சையால் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
கைது நடவடிக்கை தேவை
சென்னை ஓமந்தூரர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளி கமல்:- எனது தலையில் லேசான கட்டிக்கு அறுவை சிகிச்சை மூலம் குணம் அடைந்தேன். தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்தாலும் டாக்டர்கள் அக்கறையுடன் சிகிச்சை அளித்தார்கள். விரைவில் குணம் அடைந்து விடுவீர்கள் என்று நம்பிக்கையும் ஊட்டினார்கள்.
இதுபோன்ற சிறந்த டாக்டர்கள் இருக்கும் அரசு மருத்துவத்துறையில் அலட்சிய போக்குடன் செயல்படும் டாக்டர்களும் இருப்பது வேதனைக்குரியது. கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் அந்த டாக்டர்களை கைது செய்து சட்டரீதியாக தண்டனை வாங்கி கொடுத்தால்தான் வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளியின் உறவினர் விநாயகம்:- எனது மருமகனுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம். சில பரிசோதனைகள் செய்து விட்டு ரூ.15 ஆயிரம் பில் போட்டார்கள். உடனே அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தோம்.
தற்போது எனது மருமகனுக்கு ஒரு பைசா செலவு இல்லாமல் அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். அரசு டாக்டர்களின் சேவை மகத்தானது. போற்றுதலுக்குரியது.
மனதில் அச்சத்தை...
சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ராகுல்:- ஒரு சிறிய விபத்தில் எனது வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து பரிசோதித்தபோது கை நரம்பு அறுந்துள்ளதாகவும், ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
நான் கடந்த 3 நாட்களாக ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கிறேன். டாக்டர்களும், நர்சுகளும் நன்றாக கவனித்து கொள்கிறார்கள். வெள்ளிக்கிழமை ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் தவறான அறுவை சிகிச்சையால் பிரியா என்ற மாணவி பலியானது மனதில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தினாலும் இந்த அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
நோயாளி ரவிச்சந்திரன்:- எனக்கு சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் முதுகெலும்பு முறிந்தது. தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது, 'என் முதுகு பகுதியில் கேன்சர் செல்கள் இருப்பதாகவும், 2 நாட்களுக்கு மேல் உயிரோடு இருக்க மாட்டேன்' என்று சொல்லிவிட்டார்கள்.
வாழ்க்கை முடிந்துவிட்டதே என்று கலங்கி போன நான் உறவினர்களின் வழிகாட்டுதலின் படி சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு சிகிச்சைக்கு சேர்ந்தேன். டாக்டர்களின் கனிவு, சிறப்பாக சிகிச்சையால் மறுவாழ்வு பெற்றுள்ளேன்.
எனவே ஒரு சில சம்பவங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த அரசு டாக்டர்கள் மீது குற்றச்சாட்டுகளை வாரி இறைக்க கூடாது. என்னை போன்ற பல உயிர்களை அரசு டாக்டர்கள் காப்பாற்றி கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நோயாளி ரங்கன் என்பவரின் மனைவி கோடீஸ்வரி:- பெயிண்டிங் வேலை செய்யும்போது எனது கணவர் தவறி கீழே விழுந்துவிட்டார். அதில் அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கடந்த 2 மாதங்களாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு நாங்கள் சிகிச்சைக்காக வந்து செல்கிறோம்.
நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை மட்டும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. தற்போது எனது கணவர் காலில் அறுவை சிகிச்சை நல்ல முறையில் முடிந்தது. அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளை நீண்ட நேரம் காக்க வைக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
நோயாளிகள் ஆதங்கம்
பெயர் தெரிவிக்க விரும்பாத நோயாளிகளின் ஆதங்கம் வருமாறு:- ஒரு நோய்க்கு சிகிச்சை பெற வந்தால் கூடுதல் நோய்களை பெற்று செல்லும் இடம் போன்று சுகாதாரமற்ற முறையில் இருந்த அரசு ஆஸ்பத்திரிகளில் தற்போது சுத்தம், சுகாதாரம் சிறப்பாக பேணி காக்கப்படுவது பாராட்டத்தக்கது. தனியார் ஆஸ்பத்திரிகள் போன்று அரசு ஆஸ்பத்திரிகள் தரம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அரசு டாக்டர்கள் பலர் தனியாக கிளினிக் வைத்து நடத்துகிறார்கள். எனவே அவர்கள் அதில்தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். தனியாக கிளினிக் நடத்தும் அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்கள் கவனம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரி நோயாளிகள் மீது மட்டும் இருக்கும்.
அரசு ஆஸ்பத்திரிகளில் ஒவ்வொரு பரிசோதனைக்காக அங்கும், இங்கும் அலைக்கழிக்கப்படுவது வேதனையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றால் பணம் செலவாகும் என்பதால் தான் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறோம். ஆனால் இங்கு 'ஸ்ட்ரெச்சர்', நாற்காலியில் தள்ளி கொண்டு செல்வதற்கு வார்டு பாய் முதல் ஆயா வரை கட்டாய கட்டண வசூலில் ஈடுபடுகிறார்கள்.
இந்த குறைகள் மீது தீர்வு காண மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.