< Back
மாநில செய்திகள்
நடிகர் ராஜேந்திரநாத் கார் கண்ணாடி உடைப்பு..!
மாநில செய்திகள்

நடிகர் ராஜேந்திரநாத் கார் கண்ணாடி உடைப்பு..!

தினத்தந்தி
|
15 Jun 2022 10:00 AM IST

நடிகர் ராஜேந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முக்கூடலில் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்துமாலை அம்மன் கோவில் திருவிழா வருகிற ஜூலை 3-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நடிகர் ராஜேந்திரநாத் நேற்று கோவிலில் வெள்ளையடித்து கொண்டிருந்தவர்களிடம், யாரிடம் அனுமதி கேட்டு வெள்ளையடிக்கிறீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர்கள் விழாக்குழுவினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர், அவரிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டனர். பின்னர் அவர் காரில் ஏறி அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் முக்கூடல் போலீஸ் நிலையத்துக்கு சென்ற நடிகர் ராஜேந்திரநாத், தன்னை சிலர் தாக்க வந்ததாக புகார் கொடுத்தார். இதேபோல் கோவில் விழாக்குழுவினரும், ஊர் பொதுமக்களும் சேர்ந்து, நடிகர் ராஜேந்திரநாத் கோவில் விழா நடத்தும் போதெல்லாம் இப்படி பிரச்சினை செய்கிறார். எனவே திருவிழா நல்ல முறையில் நடக்க நீங்கள் எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

இந்த இரு மனுக்களையும் விசாரித்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நடிகர் ராஜேந்திரநாத் நெல்லைக்கு வந்து தனது கார் கண்ணாடியை முக்கூடலில் சிலர் உடைத்து விட்டதாக போலீ்ஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து முக்கூடலில் இரவில் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு, நடிகர் ராஜேந்திரநாத் மீதான எங்கள் புகார் மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்