< Back
மாநில செய்திகள்
பந்தலூர் அருகே பரபரப்பு:  6 ஆடுகளை அடித்துக்கொன்ற செந்நாய்கள்
நீலகிரி
மாநில செய்திகள்

பந்தலூர் அருகே பரபரப்பு: 6 ஆடுகளை அடித்துக்கொன்ற செந்நாய்கள்

தினத்தந்தி
|
20 May 2022 11:45 AM GMT

பந்தலூர் அருகே 6 ஆடுகளை அடித்துக்கொன்ற செந்நாய்களால் பரபரப்பு ஏற்பட்டது.

பந்தலூர்

பந்தலூர் அருகே 6 ஆடுகளை அடித்துக்கொன்ற செந்நாய்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே நாயக்கன்சோலையை சேர்ந்தவர் தியாகராஜ். விவசாயி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். அதன்படி இவர் வளர்த்த வந்த 8 ஆடுகள் மேய்ச்சலுக்கு அந்தப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டு இருந்தது. ஆனால் மேய்ச்சலுக்கு சென்று ஆடுகள் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆடுகளை தேடி சென்றார். அப்போது நாயக்கன்சோலை பகுதியில் 2 ஆடுகள் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தது.

இறந்து கிடந்தன

இதனை கவனித்த தியாகராஜ் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுபற்றி சேரம்பாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில சேரம்பாடி உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி, வனவர் மாண்பன் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று, படுகாயம் அமைந்த 2 ஆடுகளையும் மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அந்த ஆடுகளுக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அந்தப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 6 ஆடுகள் கழுத்தில் கடிப்பட்டு இறந்து கிடந்தன.

பொதுமக்கள் பீதி

மேலும் அங்கு பதிவாகி இருந்த கால்தடங்களை அதிகாரிகள் மற்றும் வனஊழியர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அது செந்நாய்களின் கால்தடம் என்பது தெரியவந்தது. மேலும் இந்த 6 ஆடுகளையும் அடித்துக்கொன்ற செந்நாய்கள்தான் என்பதும் தெரிந்தது. இதையடுத்து 6 ஆடுகளும் அந்தப்பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற 6 ஆடுகளை செந்நாய்கள் அடித்துக்ெகான்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்