மதுரை
மாநகராட்சி கூட்டத்தில் கமிஷனர் இடமாற்றத்தை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
|மாநகராட்சி கமிஷனர் இடமாற்றத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
கவுன்சிலர்கள் கூட்டம்
மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது. புதிய மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் முன்னிலை வகித்தார். மேயர் இந்திராணி தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் மேயர் தீர்மானங்களை வாசித்து புதிய கமிஷனரை சபையில் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது திடீரென்று எதிர்கட்சி தலைவர் சோலைராஜா எழுந்து நின்று பேசினார். அப்போது அவர், தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் 4 மாநகராட்சி கமிஷனர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு பொறுப்பேற்ற பிரவீன் குமார் சிறப்பாக பணியாற்றினார். ஆனால் எதற்கு அவரை மாற்றம் செய்தீர்கள் என்றார். அதற்கு மேயர், இது அரசின் முடிவு என்றார்.
உடனே சோலைராஜா, தவறான விஷயங்களுக்கு அவர் ஒத்துழைப்பு தராததால் மாற்றி விட்டீர்கள் என்றார். அவரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பினர். பதிலுக்கு அ.தி.மு.க.வினர் அனைவரும் எழுந்து நின்றனர்.
வெளிநடப்பு
அப்போது சோலைராஜா, ஒரு கமிஷனர் மதுரைக்கு வந்தால் அவர் மதுரை மக்களின் பிரச்சினைகளை அறிந்து செயல்பட 3 மாதங்கள் ஆகிவிடும். தற்போது மழை காலம் தொடங்கி விட்டதால் டெங்கு கொசு உள்பட பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர் என்றார்.
பின்னர் அவர், கமிஷனர் இடமாற்றம் செய்வதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சோலைராஜா தலைமையில் சபையில் இருந்து வெளியேறினர். பின்னர் அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் இடமாற்றத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
சாலைப்பணிகள்
அதனைத்தொடர்ந்து சபையில் விவாதம் தொடங்கியது. முதலில் மண்டல தலைவர்கள் பேசினர். 1-வது மண்டல தலைவர் வாசுகி பேசும் போது, பாதாள சாக்கடை பணிகள் மந்தமாக நடக்கிறது. பல இடங்களில் சாலைகள் அமைப்பதற்கு ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளன. சாலை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். தெரு விளக்குகள் எரியாமல் உள்ளன. பழைய விளக்குகளை மாற்றி புதிய விளக்குகள் அமைக்க வேண்டும் என்றார்.
மண்டலம்-2 தலைவர் சரவண புவனேஸ்வரி பேசும்போது, சாலை பணிகளை தகுதியற்ற ஒப்பந்தகாரர்களுக்கு மாநகராட்சி வழங்கி உள்ளது. அவர்கள் பல பணிகளை எடுத்து விட்டு எந்த பணியையும் செய்ய வில்லை. ஒரு பணியை எடுத்து முடிக்காதவர்களுக்கு மீண்டும் புதிய பணியை ஏன் வழங்க வேண்டும். பணியை எடுத்து அதனை சரியாக செய்யாதவர்களை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என்றார்.
தீபாவளி பரிசு
மண்டலம்-4 தலைவர் முகேஷ் சர்மா பேசும்போது, பல இடங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. இதை அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. மறியல் செய்ய போகும் மக்களை ஒவ்வொரு முறையும் தடுத்து சமாதானம் செய்து வருகிறோம். எங்கள் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முல்லைபெரியாறு குடிநீர் திட்டப்பணிகள் மந்த நிலையில் நடக்கிறது. அதனை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.
மண்டலம்-5 தலைவர் சுவிதா பேசும் போது, எங்கள் மண்டலத்தில் பணிகளை மேற்கொள்ள ஜே.சி.பி. எந்திரங்கள் இல்லை. எனவே தீபாவளி பரிசாக எங்களுக்கு ஜே.சி.பி. எந்திரம் வழங்க வேண்டும் என்றார்.