தூத்துக்குடி
ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த கலெக்டர்- எம்.எல்.ஏ.
|ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஒரே மோட்டார் சைக்கிளில் கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சென்று ஆய்வு செய்து, சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆற்றில் நீர்வரத்து குறைந்தது
கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாததாலும், கோடை வெயில் வாட்டி வதைத்ததாலும் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டத்தில் குறைந்தளவே தண்ணீர் உள்ளது. இங்கு ஆற்றுப்படுகையில் உள்ள உறைகிணறுகளில் இருந்து பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் போதிய தண்ணீர் அனுப்ப முடியாமல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் நேற்று ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை பார்வையிட்டனர். பின்னர் ஸ்ரீவைகுண்டம் பொன்னங்குறிச்சி, சுப்பிரமணியபுரம் ஆற்றுப்படுகையில் உள்ள உறைகிணறுகளை பார்வையிட புறப்பட்டனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற கலெக்டர்
அங்கு ஒற்றையடிப்பாதை வழியாகவே செல்ல முடியும் என்பதால், பாதுகாப்புக்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை வாங்கிய கலெக்டர் செந்தில்ராஜ் ஹெல்மெட் அணிந்து கொண்டு, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.வை தன்னுடன் அழைத்து கொண்டு புறப்பட்டார்.
சுமார் 2 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளை கலெக்டர் ஓட்டிச் சென்று, தாமிரபரணி ஆற்றுப்படுகையில் பல்வேறு இடங்களில் உள்ள உறைகிணறுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
கூடுதலாக தண்ணீர் திறப்பு
ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை அருகில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளில் இருந்து சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட பகுதிகளுக்கு 308 கிராம கூட்டு குடிநீர் திட்டத்திலும், உடன்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 150 கிராம கூட்டு குடிநீர் திட்டத்திலும் மற்றும் காயல்பட்டினம், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. போதிய மழை இல்லாததால் தாமிரபரணியில் நீர்வரத்து குறைந்ததால், மணிமுத்தாறு அணையில் இருந்து கூடுதலாக வினாடிக்கு 380 கனஅடி தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை ஸ்ரீவைகுண்டம் ஆற்றுப்படுகையில் உள்ள உறைகிணறுகளுக்கு பொக்லைன் எந்திரம் மூலம் திருப்பி விட்டு போதிய குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஓரிரு நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் தட்டுப்பாடின்றி போதியளவு குடிநீர் வழங்கப்படும்.
மழைக்காலத்தில் தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை சேமிக்கும் வகையில், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையின் கீழ்பகுதியில் சிறிய அணை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. மருதூர், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைகளின் பாசன கால்வாய்களை அகலப்படுத்தி குளங்களில் போதியளவு தண்ணீர் இருப்பு வைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து அனுப்பப்படும் குடிநீரில் தேவையான அளவு குளோரின் கலந்து சுகாதாரமான முறையில் வினியோகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாரியப்பன், ஆதிமூலம், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ராமசாமி, குமார், மகேஷ், தாசில்தார் சிவகுமார், காங்கிரஸ் வட்டார தலைவர் நல்லக்கண்ணு, மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.