செங்கல்பட்டு
மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
|மாமல்லபுரம் அருகே பெருமாளேரி பகுதியில் நடந்த மனுநீதி முகாமில் பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த வடகடும்பாடி ஊராட்சிக்குட்பட்ட பெருமாளேரி கிராமத்தில், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வருவாய் துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், முகாமில் முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்ரிடம் பொதுமக்கள் நேரடியாக வழங்கினர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்தில் மரணமடைந்த குடும்பத்தினருக்கு ரூ.9.10 லட்சம், சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.1 லட்சம் மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் சிறு வணிகக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர்க்கடன் என மொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூ.20½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் சாகிதாபர்வீன், வடகடம்பாடி ஊராட்சி தலைவர் வி.ஜி.பரசுராமன், ஊராட்சி துணைத்தலைவர் தேவிகா சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.