காஞ்சிபுரம்
ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணியமர்வு ஆணை கலெக்டர் வழங்கினார்
|காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் ்கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தகுதியான விண்ணப்பங்களுக்கு டிசம்பர் 2022-ல் நடைபெற்ற மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் நேர்காணலில் பெற்ற மதிப்பெண் மற்றும் அப்பதவிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதிக்குரிய மதிப்பெண் போன்றவற்றின் அடிப்படையில் 113 விற்பனையாளர்கள் மற்றும் 158 கட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் https://www.drbkpm.in இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், 10 மாற்றுத்திறனாளி விற்பனையாளர்கள் மற்றும் 18 மாற்றுத்திறனாளி கட்டுநர்களுக்கு பணியமர்வு ஆணையை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, காஞ்சீபுரம் மண்டல கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) கி.மணி, மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.