< Back
மாநில செய்திகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

தினத்தந்தி
|
25 April 2023 7:11 AM GMT

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்திருந்து நிலம், சமூக பாதுகாப்பு திட்டம், வேலைவாய்ப்பு, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள், இதர துறைகள் சம்பந்தமாக தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகுதி உள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் சுயதொழில் செய்து வாழ்வாதாரத்தை முன்னேற்றும் விதமாக ரூ.6.25 லட்சம் வங்கி கடன் பெற்ற ஒருவருக்கு அரசின் மானிய தொகை ரூ.2.25 லட்சம் உள்பட ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டிலான சரக்கு வாகனத்தை வழங்கினார். ரூ.1.50 லட்சம் வங்கி கடன் பெற்ற ஒரு பயனாளிக்கு மானிய தொகை ரூ.70 ஆயிரம் உள்பட ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டிலான ஆட்டோவை வழங்கினார். மொத்தம் 2 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் வாகனங்களை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆவின் விற்பனை மையம் அமைக்க ஆவின் முகவராக தேர்வு செய்யப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் பால் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான அனுமதியையும் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்