திருச்சி
லாரியை வேகமாக ஓட்டி வந்த கிளீனர்
|லாரியை கிளீனர் வேகமாக ஓட்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தா.பேட்டை:
லாரி கிளீனர்
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா செங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 47). டிரைவரான இவர் சொந்தமாக கனரக லாரி வைத்து, ஓட்டி வந்தார். அந்த லாரியில் கிளீனராக ஒரு வாலிபர் வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று பெங்களூருக்கு தக்காளி லோடு ஏற்றுவதற்காக செல்ல இருந்ததால், கிளீனரை நாமக்கல்லில் பட்டறையில் நிறுத்தி இருந்த லாரியின் அருகிலேயே இருக்குமாறும், தான் வந்து அவரை ஊருக்கு அனுப்பி வைப்பதாகவும் ஜெகதீசன் கூறியுள்ளார்.
காரில் துரத்தினார்
இந்தநிலையில் கிளீனர் மது குடித்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் நாமக்கல்லில் பட்டறையில் நிறுத்தி இருந்த லாரியை வேகமாக ஓட்டிக்கொண்டு எருமைப்பட்டி, பவுத்திரம் வழியாக தா.பேட்டை நோக்கி வந்துள்ளார்.
இதற்கிடையே நாமக்கல் அருகே கொசவம்பட்டியில் இருந்த லாரியின் உரிமையாளர் ஜெகதீசன், தனது லாரி அந்த வழியாக சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் வாடகை காரில், லாரியை பின் தொடர்ந்து துரத்தி வந்துள்ளார்.
கண்ணாடி உடைப்பு
மேலும் இது பற்றிய தகவல் எருமைப்பட்டி போலீஸ் நிலையத்தில் இருந்து தா.பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலேந்திரன், பரமேஸ்வரன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தா.பேட்டை கடைவீதியில் சாலை வளைவில் அதிவேகமாக பொதுமக்கள் மீது மோதுவது போல் வந்த லாரியை கண்ட அப்பகுதியினர், லாரியை மறித்து நிறுத்தினர். மேலும் கூட்டத்தில் இருந்த சிலர், கிளீனரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். லாரியின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உயிர் இழப்புகள் தவிர்ப்பு
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தா.பேட்டை போலீசார் பொதுமக்களிடம் இருந்து கிளீனரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழியில் எந்த விபத்தும் நடைபெறாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்புகள் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.