சென்னை
சென்னை, தாம்பரம் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை பணிகளை தலைமைச் செயலாளர் ஆய்வு
|சென்னை மற்றும் தாம்பரம் பகுதிகளில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைத்துறை பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
திருவான்மியூர் முதல் அக்கரை வரை
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரையிலான 4 வழிச்சாலை 6 வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்படுகிறது. ரூ.111 கோடியில் 10.50 கி.மீ. நீளத்துக்கு நில எடுப்புடன் கூடிய சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று ஆய்வு செய்தார். நில எடுப்பு பணி, கட்டுமான பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மேலும் அவர், சென்னை சோழிங்கநல்லூரில் ராஜீவ்காந்தி சாலை-கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் சாலையான கலைஞர் கருணாநிதி பிரதான சாலையில் சோழிங்கநல்லூர் ஏரியில் இருந்து பக்கிங்காம் கால்வாய்க்கு மழை காலங்களில் உபரிநீர் செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.47 கோடியில் 1.7 கி.மீ. தூரத்துக்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரெயில்வே மேம்பால பணி
சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் சர்தார் படேல் சாலை, ராஜீவ்காந்தி சாலையை இணைக்கும் வகையில் ரூ.59 கோடியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளையும், தகவல் தொழில்நுட்ப சாலையான ராஜீவ்காந்தி சாலையில் இந்திரா நகர் மற்றும் டைடல் பார்க் சந்திப்பில் ரூ.109 கோடியில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் 2 'யு' வடிவ சாலை மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர்-சேலையூர் பகுதியை இணைக்கும் வகையில் 6 வழித்தடத்தில் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறையால் 80 கி.மீ. நீளத்துக்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளையும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், தாம்பரம்-வண்டலூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பெருங்களத்தூரில் ரூ.234.37 கோடியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை ஆய்வு செய்தார். மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
சுரங்கப்பாதை
சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி. சாலையையும், ராதா நகர் பகுதியையும் இணைக்கும் வகையில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும்விதமாக ரூ.29 கோடியில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை பணியையும் இறையன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தமிழ்நாடு அரசின் நெஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் செல்வராஜ், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக மாடம்பாக்கம் மப்பேடு பகுதியில் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பணிகளை இறையன்பு ஆய்வு செய்தபோது அங்கு வந்த நரிக்குறவ பெண் ஒருவர், இறையன்புவுக்கும், கலெக்டர் ராகுல்நாத்துக்கும் பாசிமாலையை அணிவித்தார்.