சென்னை
பள்ளிக்கரணை, புழுதிவாக்கம் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு
|பள்ளிக்கரணை, புழுதிவாக்கம் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு செய்தார்.
சென்னை புறநகர் பகுதிகள் மழை காலங்களில் பெரிதும் பாதிக்கப்படுவதால் அங்கு மழைநீர் கால்வாய்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு செய்தார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளில் வேளச்சேரி ரெயில் நிலையத்தின் பின்பகுதியில் இருந்து வரும் மழைநீரை வெளியேற்றுவதற்கான குழாய் அமைக்கும் பணி 1.36 கி.மீ. நீளத்துக்கு நடைபெற்று வருகிறது. பல்லாவரம்- துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை இரண்டாக பிரிக்கும் நிலையில் ஒரு பகுதியில் உள்ள நீரை மற்றொரு பகுதிக்கு வெளியேற்றும் விதமாக வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
பின்னர் புழுதிவாக்கம் ராம் நகர், சீனிவாச நகர், பிருந்தாவன் நகர், செல்வம் தெருவில் வீராங்கால் ஓடையின் போக்கு கால்வாய், உள்ளகரம் பெருமாள் கோவில் தெருவில் நடக்கும் மழைநீர் கால்வாய் பணி, தில்லை கங்கா நகர், பரங்கிமலை, பழவந்தாங்கல், மீனம்பாக்கம் ஆகிய சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் போக்குவரத்து சீராக இருக்க எடுக்கப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தலைமை செயலாளர் பார்வையிட்டார்.
அப்போது அவருடன் சென்னை மாநகராட்சி கமிஷன் ககன்தீப் சிங் பேடி, அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ. மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெ.கே.மணிகண்டன், பள்ளிக்கரணை பாபு, ஷர்மிளா திவாகர் மற்றும் உயர் அதிகாரிகள் இருந்தனர்.